Tamilசினிமாதிரை விமர்சனம்

நட்பே துணை- திரைப்பட விமர்சனம்

சுந்தர்.சி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்து, ஹீரோவாக நடித்திருக்கும் ‘நட்பே துணை’ எப்படி என்பதை பார்ப்போம்.

கிரிக்கெட், கபடி, பெண்கள் கிரிக்கெட், கூடைப்பந்து, கால்பந்து என்று பல விளையாட்டுகளை மையமாக வைத்து தமிழ் சினிமாவில் படங்கள் வெளியாகியிருந்தாலும், ஹாக்கி விளையாட்டை மையமாக வைத்து வெளியாகியிருக்கும் முதல் தமிழ்ப் படம் என்ற கூடுதல் பலத்தோடு இந்த ‘நட்பே துணை’ வெளியாகியிருக்கிறது.

பாண்டிச்சேரியை சேர்ந்த ஹீரோ ஆதி, பிரான்ஸ் நாட்டில் செட்டிலாக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால், அவரது அம்மா கெளசல்யா, அவரை பிரான்ஸுக்கு செல்லவிடாமல் தடுக்கிறார். அம்மாவுக்கு தெரியாமல் பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற முயற்சிக்கும் ஆதி, அதற்காக காரைக்காலில் இருக்கும் தனது உறவினர் வீட்டுக்கு செல்ல, அங்கே ஹீரோயின் அனகாவை பார்த்ததும் காதல் கொள்கிறார். பிரான்ஸுக்கு செல்லும் வேலையை விட்டுவிட்டு அனகாவை பாலோ செய்வதையே வேலையாக வைத்திருக்கும் ஆதி, அனகா எங்கு சென்றாலும் அவர் பின்னாடியே செல்ல, ஹாக்கி வீராங்கனையான அனகா, ஹாக்கி பயிற்சி மேற்கொள்ளும் மைதானத்திற்கும் சென்று தனது காதலை வளர்க்கிறார்.

இதற்கிடையே, அனகா பயிற்சி மேற்கொள்ளும் ஹாக்கி மைதானத்தை அமைச்சர் கரு.பழனியப்பன், வெளிநாட்டு நிறுவனத்திற்காக அபகரிக்க முயற்சிக்க, அவரிடம் இருந்து மைதானத்தை காப்பாற்ற ஹாக்கி பயிற்சியாளர் ஹரிஷ் உத்தமன் போராடுகிறார். ஒரு பக்கம் அமைச்சர் சட்ட ரீதியாக, ஹாக்கி விளையாட்டு மைதானத்தை கைப்பற்ற நினைக்க, அதே சட்ட ரீதியாக அவரிடம் இருந்து மைதானத்தை காப்பாற்ற ஹரிஷ் உத்தமனும் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், ஆதியும் பெரிய ஹாக்கி வீரர் என்பதும், அவர் இந்திய அணியில் விளையாடியவர் என்ற உண்மை தெரிய வருகிறது.

உடனே, ஆதி தலைமையில் ஒரு அணியை உருவாக்கி, தனது மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ளும் அணி சிறந்த அணி என்பதை நிரூபித்து, அதன் மூலம் மைதானத்தை காப்பாற்ற நினைக்கும் ஹரிஷ் உத்தமன், ஆதியை ஹாக்கி விளையாட அழைக்க, ஆதியோ மறுப்பு தெரிவிப்பதோடு, இனி ஹாக்கி பேட்டை தொடப்போவதில்லை என்று அடம் பிடிக்கிறார். ஆதியின் இந்த முடிவுக்கு என்ன காரணம், அவர் மனம் மாறி ஹாக்கி விளையாடினாரா, மைதானம் அமைச்சரிடம் இருந்து காப்பாற்றப்பட்டதா, இல்லையா என்பது தான் படத்தின் மீதிக்கதை.

விளையாட்டை மையப்படுத்திய கதைக்களம் என்றாலே, விளையாட்டுத் துறையில் நடக்கும் ஊழல், அதிகார துஷ்பிரயோகம், பண பலம் போன்றவைகள் பற்றி திரைக்கதை பேசும். இந்த படமும் அதுபோன்ற விஷயங்களை பேசுவதோடு, விளையாட்டு வீரர்களை உருவாக்கும் விளையாட்டு மைதானங்களை மையக்கருவாக பேசியிருப்பது திரைக்கதையின் பலமாக உள்ளது.

தலைப்பு மட்டும் நட்பே துணை வைக்காமல், படம் முழுவதிலும் நட்புக்கு மரியாதை செய்திருக்கும் ஆதி, தனது முதல் படத்தில் இளம் இசையமைப்பாளராக துள்ளல் நடிப்பை வெளிப்படுத்தியவர், இதில் ஹாக்கி வீரராக உற்சாகமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தன்னிடம் ரசிகர்கள் எதை எதிர்ப்பார்க்கிறார்கள், என்பதை நன்றாக புரிந்து வைத்திருக்கும் ஆதி, அதை இந்த படத்தில் அதிகமாகவே கொடுத்திருக்கிறார். அதுவும் ஹாக்கி வீரராக ஆதி களம் இறங்கும் காட்சியில், நிஜமாகவே விளையாட்டு வீரராக ரசிகர்கள் மனதில் ஒட்டிக் கொள்கிறார்.

ஹீரோயின் அனகாவும் ஒரு ஹாக்கி வீராங்கனையாக நடித்திருந்தாலும், ஆதியின் நண்பர்களாக நடித்திருப்பவர்களுக்கு இருக்கும் வேலை கூட அம்மணிக்கு வழங்கப்படவில்லை என்பது தான் வருத்தம். அதிலும், ”இவரையா ஆதி பார்த்ததும் காதல் கொள்கிறார், அந்த அளவுக்கு ஒன்னுமில்லையே” என்றும் எண்ண தோன்றுகிறது.

ஹாக்கி பயிற்சியாளராக நடித்திருக்கும் ஹரிஷ் உத்தமன், ஆதியின் நண்பர்கள் என அனைவரும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். யூடியுபில் பிரபலமாக இருக்கும் பலர் இதில் நடித்திருந்தாலும், அவர்களால் படத்திற்கு எந்தவிதத்திலும் கூடுதல் பலம் கிடைக்கவில்லை. குறிப்பாக காமெடிக் காட்சிகள் ரொம்பவே டல்லடிக்கிறது. சாராவின் சில காட்சிகள் மட்டும் சிரிக்க வைக்கிறது. அதிலும், காவல் நிலையத்தில், ஒரு பெண்ணை வைத்து அவர் செய்யும் நக்கல், குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது.

அமைச்சராக வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் கரு.பழனியப்பனின் நடிப்பை விட, அவரது டயலாக் டெலிவரி தான் பெரிதும் ரசிக்க வைக்கிறது. மத்திய, மாநில அரசுகளை கிண்டலடித்து கரு.பழனியப்பன் பேசும் அத்தனை வசனங்களும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறது.

அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவில் ஹாக்கி போட்டி காட்சிகள் சீட் நுணியில் உட்கார வைக்கிறது. ஆதியின் இசையில், பாடல்கள் அனைத்தும் துள்ளல் ரகங்கள் என்றாலும், பெரும்பாலான வார்த்தைகள் புரியாமல் போவது வருத்தமாக இருக்கிறது. சத்தத்தை கொஞ்சம் குறைத்துக் கொண்டு, பாட்டுக்கு இசையமைத்திருந்தால், பாடல்கள் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

ஆதி மற்றும் அவரது நண்பர்கள் காப்பாற்ற போராடும் விளையாட்டு மைதானம், எப்படி உருவானது என்பதற்கான ஒரு வரலாற்று கதையை படத்தின் ஆரம்பத்தில் சொல்கிறார்கள். பிறகு அடுத்தடுத்த காட்சியில், படத்தின் கதையே அந்த வரலாற்று கதை தான், என்று ரசிகர்கள் யூகித்துவிடுவது திரைக்கதைக்கு பலவீனமாக அமைந்தாலும், அமைச்சர் கரு.பழனியப்பனின் அரசியல் வசனங்களால் படம் விறுவிறுப்படைகிறது.

சமகால அரசியல் நிகழ்வுகள், இளைஞர்களின் போராட்டம் போன்றவற்றின் பலம், பலவீனம் பற்றி பேசும் காட்சிகள் அத்தனையும் கைதட்டல் பெறுகிறது. ஆதிக்கு சில இடங்களில் மாஸ் எண்ட்ரி கொடுத்திருக்கும் இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு, அவரையே படம் முழுவதும் முன் நிறுத்தாமல், கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து காட்சிகளை நகர்த்தியிருப்பது படத்துடன் ரசிகர்களை ஒன்றிவிட செய்கிறது.

படத்தின் கதை இது தான், என்பது படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே தெரிந்துவிட்டாலும், ஸ்ரீகாந்த் மற்றும் தேவேஷ் ஜெயச்சந்திரன் ஆகியோரது வசனங்கள் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறது.

ஹாக்கி விளையாட்டு என்பது மட்டும் தமிழ் சினிமாவுக்கு புதிதாக இருந்தாலும், படத்தில் உள்ள அத்தனையும் ஏற்கனவே தமிழ் சினிமாவில் வெளியான விளையாட்டுப் படங்களில் பார்த்தது தான். இருந்தாலும், அதிலும் எந்த அளவுக்கு வேறுபாட்டை காட்ட முடியுமோ அந்த அளவுக்கு வேறுபாட்டை காட்டியிருக்கும் இப்படத்தின் கதையாசிரியர்கள், இளைஞர்களுக்கு மெசஜ் சொல்லும் படமாக மட்டும் இன்றி, ஒரு கலர்புல்லான படமாகவும் இப்படத்தை கொடுத்திருக்கிறார்கள்.

மொத்தத்தில், ‘நட்பே துணை’ படத்தை நம்பி பார்க்கலாம்.

-ஜெ.சுகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *