Tamilவிளையாட்டு

நம் கிரிக்கெட் அணியினருக்கு பிரதமரின் வார்த்தைகள் ஊக்கமாக அமையும் – விரேந்தர் சேவாக்

4 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஆண்கள் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடரின் 2023க்கான 13-வது போட்டி தொடர், அக்டோபர் 5 அன்று தொடங்கி நவம்பர் 19 அன்று நிறைவடைந்தது. அனைத்து போட்டிகளும் இந்தியாவில் பல நகரங்களில் நடைபெற்றது.

இப்போட்டி தொடரின் இறுதி போட்டி, குஜராத் மாநில அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. அதில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மோதியது. இப்போட்டியை காண இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் வருகை தந்தார்.

இத்தொடரின் ஆரம்பம் முதல், பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று வந்த இந்திய அணியினர், இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியினரிடம் தோல்வி அடைந்தனர். உலகம் முழுவதும் உள்ள இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த படுதோல்வி, இந்திய அணியினரையும் மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது. போட்டி முடிந்ததும் விளையாட்டு மைதானத்திலேயே சில இந்திய அணி வீரர்கள் கண்ணீர் சிந்தினர்.

இதையடுத்து சோர்வுடன் தங்களின் ஒய்வு அறையில் இருந்த இந்திய அணியினரை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று கை குலுக்கி ஆறுதல் வார்த்தைகள் கூறி உற்சாகப்படுத்தினார். மேலும், இந்திய அணியினரை டெல்லிக்கு வருமாறு அழைப்பும் விடுத்தார். இந்நிலையில், இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரரான “அதிரடி மன்னன்” வீரேந்தர் சேவாக் கருத்து தெரிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

வீரர்களை ஓய்வு அறையில் (dressing room) நாட்டின் பிரதமரே நேரில் சென்று காண்பது அபூர்வமான விஷயம். ஒரு மோசமான தோல்விக்கு பிறகு நொறுங்கிய அவர்களின் இதயங்களையும், உற்சாகத்தையும் மேலே கொண்டு வர இது அவசியம். தனது முக்கிய பணிகளுக்கு இடையே ஒரு பிரதமர் தோல்வியடைந்த வீரர்களை காண வருவது இதற்கு முன்பு நான் கேள்விப்பட்டதில்லை. வீரர்களின் நம்பிக்கையை உயர்த்தும் அற்புதமான நடத்தை இது. படுதோல்விக்கு பிறகு அணியினர், குடும்ப உறுப்பினர்களை போன்று ஒற்றுமையுடன் ஆறுதல் கூற எவரேனும் உள்ளனரா என ஏங்கும் தருணம் அது. இனி வரும் காலங்களில் பல நாடுகளில் பல போட்டிகளில் பங்கு பெற உள்ள நம் நாட்டு அணியினருக்கு பிரதமரின் வார்த்தைகள் ஊக்கமாக அமையும். இப்போது நடந்தது போல், இனி வரும் போட்டிகளில் இறுதி கட்ட தடை கற்களை தாண்டவும் இது உதவும்.

இவ்வாறு சேவாக் தெரிவித்தார்.

112 கிரிக்கெட் வீரர்களை கொண்ட ஐசிசியின் “ஹால் ஆஃப் ஃபேம்” (Hall of Fame) எனும் புகழ் பெற்ற சாதனையாளர்களின் பட்டியலில் சில வாரங்களுக்கு முன், வீரேந்தர் சேவாக்கின் பெயர் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சேவாக், இப்பட்டியலில் இணையும் 8-வது இந்திய வீரர் ஆவார்.