Tamilசெய்திகள்

நான் திருப்பி அடிச்சா தாங்க மாட்டீங்க – திமுகவை எச்சரித்த குஷ்பு

நடிகை குஷ்பு குறித்து, தி.மு.க. பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஒரு மேடையில் அநாகரிகமான வார்த்தைகளை பேசினார். இதற்கு கண்டனம் தெரிவித்து, நடிகை குஷ்பு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கண்ணீர் மல்க கூறியதாவது:-

தி.மு.க.வில் உள்ள சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, என்னை பற்றி மிகவும் கேவலமாக பேசி இருக்கிறார். பெண்களுக்கு எதிராக யார் என்ன பேசினாலும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நான் கேள்வி கேட்பேன். நடவடிக்கையும் எடுப்பேன். குஷ்புவை சீண்டி பார்க்காதீங்க… திருப்பி அடிச்சா தாங்க மாட்டீங்க… என்னை பற்றி எல்லோருக்கும் தெரியும். இன்னைக்கு பேசுவா, நாளைக்கு மறந்துடுவா என எளிதாக எண்ண வேண்டாம். குஷ்பு மன்னிச்சுடுவா, ஆனால் எதையும் மறக்க மாட்டா. அந்த புத்தி எனக்கு கிடையாது.

தி.மு.க.வில் உள்ள அனைவரையும் பார்த்தே சொல்கிறேன். குஷ்புவை சீண்டி பார்க்க வேண்டாம். தி.மு.க.வில் நான் சேரும்போது, முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி என்னிடம் மேடை நாகரிகம் பற்றி சொல்லிக்கொடுத்து இருக்கிறார். அதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தி.மு.க.வில் உள்ள பெண்களே இன்றைக்கு கேவலமாக பேசும் நிலைக்கு வந்திருக்கிறார்கள். அதை அந்த கட்சிக்காரர்களும் ரசிக்கிறாங்க… இதோட நிறுத்திக்கோங்க… நானும் பதிலுக்கு ஆரம்பிச்சா உங்களால தாங்க முடியாது. திருப்பி அடிக்கும் தைரியம் எனக்கு இருக்கிறது. உங்கள மாதிரி பின்னாடி 10 பேர் எனக்கு தேவையில்லை. நான் ஒருத்தியே போதும்.

நான் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க இவங்களாம் ஒரு ஆளே கிடையாது. தைரியம் இருந்தா அவரை கட்சியில் இருந்து நீக்க சொல்லுங்க… மறுபடியும் தீனி போட்டு வளர்க்க வேண்டாம்னு சொல்லுங்க… இதையெல்லாம் நிறுத்த சொல்லுங்க… அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தை திசைதிருப்பவே, இப்படியெல்லாம் பேச சொல்லி சிலரை தீனி போட்டு தி.மு.க. வளர்க்கிறது.

மாநிலத்தின் முதல்-அமைச்சர் என்ற முறையில் மு.க.ஸ்டாலின் மீது எனக்கு மரியாதை இருக்கிறது. ஆனால் அவர் என்னை சீண்டி பார்த்தால், அவருக்கே தெரியும் என் பதிலடி எப்படி இருக்கும்னு? இதை அவருக்கு எச்சரிக்கையாகவே விடுக்கிறேன். மேலும் இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் மூலமாக தாமாக முன்வந்து வழக்கு (சூமோட்டோ) தொடுக்கிறோம். எங்கு அடித்தால் வலிக்குமோ, அங்கு அடிப்போம்.

சமீபத்தில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில், ராதாரவி பேசிய சில கருத்துகளை முன்வைத்து என்னிடம் கேள்வி கேட்பீர்கள். எனக்கு அது நன்றாகவே தெரியும். எந்த கட்சி என்றாலும், எந்த ஆணாக இருந்தாலும், பெண்களை பற்றி கேவலமாக பேச உரிமையே கிடையாது. பெத்த அப்பாவுக்கும், கட்டின புருஷனுக்கும் இந்த உரிமையை கொடுக்காதபோது, ரோட்டில் போகும் ஒருத்தனுக்கு இந்த உரிமையை கொடுத்துவிட முடியுமா? நான் இதை ஒரு பெண்ணாக சொல்கிறேன், கட்சி ரீதியாக பேசவில்லை.

யாரோ நாலு பேரின் கைத்தட்டலுக்காக பெண்ணை தவறாக பேசலாமா?. என்னைக்காவது ஆண்களை கேவலமாக பெண்கள் பேசியிருக்கிறார்களா?. ஏனெனில் நாகரிகம் என்னவென்று எங்களுக்கு எங்கள் தாய் சொல்லிக்கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் அது தெரியாமல் சிலர் தங்களின் தாயின் வளர்ப்பை அசிங்கப்படுத்துகிறார்கள்.

தி.மு.க.வின் தாயும், தந்தையும் கருணாநிதிதான். இப்படி மூன்றாந்தர பேச்சின் மூலமாக அந்த கட்சிக்காரர்கள் கருணாநிதியைத்தான் அசிங்கப்படுத்தி வருகிறார்கள். அது தெரியாமல் சிலர் ரசித்தும் கொண்டிருக்கிறார்கள். இதை கேட்டுவிட்டு நாளைக்கே தி.மு.க.வினர் என் வீட்டின் மீது கல்வீசுவார்கள். ஏன் ஏற்கனவே இதை பார்த்தவள் தான். எனவே இதை எப்படி சமாளிக்கணும்னு எனக்கு தெரியும்.

எல்லா கட்சிகளிலும் இந்த பிரச்சினை இருக்கிறது. பெண்களை இழிவாக பேச அவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது? பெண் என்றாலே இழிவாக போச்சா உங்களுக்கு… நான் ஒவ்வொரு பெண்ணுக்காகவும் பேசுறேன். பெண்களை பார்த்து சொல்கிறேன். நீங்கள் யாருக்குமே பயப்பட வேண்டாம். திருப்பி அடிங்க… நான் இருக்கிறேன். நான் திருப்பி அடிப்பேன். எனக்கு அந்த தைரியம் இருக்கிறது.

நான் யாரையும் நம்பி தமிழகம் வரலை. என் திறமையை நம்பி மட்டும் தான் வந்தேன். தி.மு.க.வில் இருந்து ஒரு பெண்ணை பற்றி அசிங்கமாக பேசியிருக்காங்க… எவ்வளவு கேவலமான வார்த்தைகள் தெரியுமா?. இன்னும் சொல்லப்போனால், வேற இடம் என்றால் நான் செருப்பாலேயே அடிச்சுருப்பேன். அந்த தைரியம் எனக்கு இருக்கு. பல பேர் அப்படி வாங்கியிருக்காங்க… ஆனால் அவ்வளவு கீழ்த்தரமாக ஒரு ஆணை செருப்பால அடிச்சு, என் செருப்பை அழுக்காக்க விரும்பவில்லை.

இந்த மாதிரியான ஆம்பளைங்கல முட்டிக்கு முட்டி தட்டினால்தான் புத்தி வரும். இல்லையென்றால் புத்தி வராது. சில தரம்கெட்ட ஆண்களிடம் கேள்வி கேட்டால் பதில் சொல்ல வக்கில்லை. இதனால் இப்படி கேவலமா பேசுறாங்க. கருணாநிதி காலத்தில் இருந்த தி.மு.க. இப்போது கிடையாது. இது ஸ்டாலின் அடிப்படையிலான புது திராவிட மாடல்.

தமிழ்நாட்டுக்கு நான் வந்து 37 வருஷம் ஆச்சு. இத்தனை வருஷத்தில இப்படி கோபமா நான் பேசியதை யாராவது பார்த்தது உண்டா? பெண்ணுக்கு உள்ள தைரியம் யாருக்கும் கிடையாது. இதற்கு முன்பு கூட, என்னை அவதூறாக பேசினார்கள். அப்போது தி.மு.க. தலைவர்கள் யாராவது கண்டனம் தெரிவித்தார்களா?. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தாரா? எதுவும் இல்லையே… ஏற்கனவே சஸ்பெண்டு செய்யப்பட்டவரை ஏன் கட்சியில் சேர்த்தீங்க?.

தி.மு.க.வில் பூங்கோதைக்கு என்ன நடந்தது? அதையெல்லாம் மறந்துவிட முடியுமா?. நாளைக்கு என் மகள்கள் என்னை பார்த்து, ‘உங்களை ஒருத்தன் கேவலமா பேசுறான். ஏம்மா அமைதியா இருந்தீங்க…’ என்று கேட்டுவிட கூடாது. எனவே தான் நான் பேசுறேன். என் மகள்களுக்காக, அனைத்து பெண்களுக்காகவும் பேசுறேன்.

இவ்வாறு குஷ்பு தெரிவித்தார்.