Tamilசெய்திகள்

நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இளங்கலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இத்தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் கிடைக்கிறது. நாடு முழுவதும் நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17-ந்தேதி நடத்தப்பட்டது.

இந்த தேர்வினை 18 லட்சத்து 70 ஆயிரம் பேர் எழுதி உள்ளனர். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வை மாணவ-மாணவிகள் எழுதியுள்ளனர். தமிழகத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதி இருக்கிறார்கள். சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவு தாமதம் ஆனதை தொடர்ந்து நீட் தேர்வு முடிவும் காலதாமதம் ஆனது. இதனால் பொறியியல், மருத்துவ உயர் படிப்பு சேர்க்கை தள்ளிப்போகிறது.

கடந்த மாதம் தொடங்க வேண்டிய பொறியியல் கவுன்சிலிங் நீட் தேர்வு முடிவினால் ஒத்தி வைக்கப்பட்டது. எப்போது நீட் தேர்வு முடிவு வெளிவரும் என்று மாணவ-மாணவிகள் ஆவலோடு காத்து இருக்கிறார்கள். இந்த நிலையில் நாளை (7-ந்தேதி) நீட் தேர்வு முடிவு வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்தது. அதனை தொடர்ந்து நீட் தேர்வு விடைத்தாள் ஒ.எப்.ஆர். ஷீட் இணையத்தில் கடந்த மாதம் 31-ந்தேதி வெளியிடப்பட்டது.

தேசிய தேர்வு முகமை அறிவித்தபடி நாளை பகல் 12 மணியளவில் நீட் தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. neet.nta.nic.in இணையதளத்தில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவினை பதிவிறக்கம் செய்யலாம். மாணவர்களின் பெயர், பாடவாரியாக பெற்ற மொத்த மதிப்பெண் மற்றும் அதன் சதவீதம் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம்.

‘நீட்’ தேர்வு முடிவு நாளை வெளிவர இருப்பதால் மாணவ-மாணவிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் தங்களுக்கு எத்தனை மதிப்பெண் கிடைக்கும் என மாணவர்கள் கணக்கிட்டு இருந்தாலும் அதிகாரப்பூர்வமாக முடிவு வர இருப்பதால் பதட்டமாகவும் காணப்படுகின்றனர்.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் எவ்வித செலவும் இல்லாமல் எம்.பி.பி.எஸ். படிக்க வேண்டும் என்ற கனவில் இருக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றால் மட்டுமே அந்த வாய்ப்பை பெற முடியும். 500-க்கு மேல் மதிப்பெண் பெறுபவர்கள் ஏதாவது ஒரு அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு வாய்ப்பு உள்ளது.

நீட் தேர்வு முடிவு நாளை வர இருப்பதை தொடர்ந்து மருத்துவ கவுன்சிலிங் நடைமுறைகளை மாநில அரசு தீவிரப்படுத்தி வருகிறது. முதலில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடை பெறும். அதற்கான ஏற்பாடுகளை மருத்துவ கல்வி இயக்ககம் செய்து வருகிறது.