Tamilசெய்திகள்

பராக் ஒபாமாவின் கருத்துக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி

இந்திய பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார். வெள்ளை மாளிகை சென்ற அவருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன்- அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் விருந்து அளித்தனர்.

அமெரிக்காவின் பாராளுமன்ற கூட்டுத்தொடரில் உரையாற்றினார். இருநாட்டு தலைவர்களும் இணைந்து பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது இந்தியாவில் முஸ்லிம்களின் உரிமை குறித்து கேள்வி பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு இந்தியாவில் பாகுபாடு என்பதற்கு இடமில்லை என பிரதமர் மோடி பதில்அளித்தார். இந்த விவகாரத்தில் ஏற்கனவே எதிர்க்கட்சிகள் மோடி அரசை விமர்சனம் செய்து வருகின்றன.

மோடி அமெரிக்காவில் இருக்கும்போது, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, பிரதமர் மோடியிடம் இந்தியாவில் முஸ்லிம்கள் உரிமை குறித்து ஜோ பைடன் விவாதிக்க வேண்டும். நான் அவருடன் பேசுவதாக இருந்தால், இதுகுறித்து விவாதம் நடத்தியிருப்பேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஒரு நாட்டின் பிரதமர் அரசுமுறை பயணமாக சென்றிருக்கும்போது, அந்த நாட்டின் முன்னாள் அதிபர் இவ்வாறு கூறியது பா.ஜனதா தலைவர்களை தர்மசங்கடத்திற்குள்ளாக்கியது. இந்த நிலையில் ஒபாமா அமெரிக்க அதிபராக இருக்கும்போது, ஆறு முஸ்லிம் நாடுகள் மீது குண்டுகள் வீசப்பட்டன என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து நிர்மலா சீதாராமன் கூறுகையில் ”அமெரிக்காவில் பத்திரிகையாளரகள் சந்திப்பின்போது பிரதமர் மோடி இந்தியாவில் எந்தவொரு பிரிவினருக்கும் எதிராக பாகுபாடு இல்லை எனக் குறிப்பிட்டார். ஆனால் இல்லாத ஒரு விசயத்தைப் பற்றி மக்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதுதான் உண்மை.

பிரதமர் மோடிக்கு வெளிநாட்டில் 13 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானவை முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாடுகள் வழங்கியது. மாநில அளவில் சட்டம் ஒழுங்கு குறித்து எழுப்பப்படும் பிரச்சினைகள் உள்ளன. அதை அந்தந்த மாநிலங்கள் பார்த்துக்கொள்ளும். தரவுகள் ஏதுமின்றி, குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசக்கூடாது. இது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பிரசாரம்.

தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்கொள்ள முடியாத நிலையில் இதுபோன்ற விசயத்தை கையில் எடுக்கிறார்கள் என்று நினைக்கிறேன். கர்நாடக மாநில தேர்தலில் வெற்றிபெற்ற போதிலும், அவர்கள் ஏன் இதுபோன்ற பிரசாரத்தை எடுத்துச் செல்கிறார்கள்.

கடந்த சில தேர்தலில்கள் காங்கிரஸ் இந்த பிரசாரத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது. தனியார் டெலிவிசன் ஒன்றுக்கு பேட்டியளித்த அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா, பிரதமர் மோடியுடன் இந்திய முஸ்லிம் குறித்த விசயத்தை எழுப்புவேன் எனத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இந்திய பிரதமர் பேசிக்கொண்டிருக்கும்போது, ஒபாமாவின் பிரசாரம் அதாவது இந்தியாவை பற்றி முன்னாள் அதிபர் பேசுவதை கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்.

வேறொரு நாடு என்பதால் நான் நிதானமாக சொல்கிறேன். அமெரிக்காவுடன் நட்பு நாடாக இருக்க நாங்கள் விரும்புகிறோம். ஆனால், அங்கேயும் மத சுதந்திரம் குறித்து கருத்துக்களை நாம் பெறுகிறோம். முன்னாள் அதிபர் ஒபாமா அதிபராக இருக்கும்போது முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஆறு நாடுகள் மீது அமெரிக்கா குண்டுகள் வீசியுள்ளது.

26 ஆயிரம் குண்டுகள் வீசப்பட்டன. அப்படி இருக்கும்போது, மக்கள் அவரது குற்றச்சாட்டு உண்மை என்று நம்புவார்களா? பிரதமர் மோடியின் வளர்ச்சி கொள்கைகளுக்கு எதிராக தங்களால் வெற்றிபெற முடியாது என்று நினைப்பதால், நாட்டின் சூழலை கெடுக்கும் திட்டமிட்ட முயற்சியாக இதை நான் காண்கிறேன்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.