Tamilசெய்திகள்

பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள முன்னேற்பாடுகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை

தமிழகத்தில் அக்டோபர் இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், பரவலாக பல்வேறு இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் வெள்ளத் தடுப்புப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இந்தப் பணிகள் அனைத்தையும் செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிக்க வேண்டுமென தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார்.

பருவமழையால் பாதிப்புகள் ஏற்பட்டாலும் அதனை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராகி வருகிறது. இதற்காக செய்யப்பட்டு உள்ள முன்னேற்பாட்டு பணிகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று ஆலோசனை நடத்தினார்.

காலை 11 மணிக்குத் தொடங்கிய இந்தக் கூட்டத்தில், வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமசந்திரன், உள்ளிட்ட அமைச்சர்கள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பொதுப்பணி-நெடுஞ்சாலை, வேளாண்மை, மக்கள் நல்வாழ்வு, மின்சாரம், வருவாய், சிறப்புத் திட்டங்கள் செயலாக்கம் உள்ளிட்ட அரசுத் துறைகளின் செயலர்கள், துறைத் தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.