Tamilசெய்திகள்

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாததால் தன்னை தானே செருப்பால் அடித்துக் கொண்ட கவுன்சிலர்

ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் நர்சிபட்டினம் நகராட்சி அமைந்துள்ளது. நர்சிபட்டினம் நகராட்சி கவுன்சிலராக தெலுங்கு தேசம் கட்சியின் முலபர்த்தி ராமராஜு இருந்து வருகிறார். கவுன்சில் தேர்தலின்போது, நகராட்சியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வசதி, தரமான சாலைகள், கழிவுநீர் வடிகால்கள் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தார்.

இதற்கிடையே, அவர் கேட்ட திட்டங்களுக்கு அரசு நிதி வழங்கவில்லை. இதனால் 31 மாதங்கள் சென்றுவிட்டன. அவரால் தனது தொகுதிக்கு தான் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற முடியவில்லை. மக்களுக்கு நல்லது செய்ய முடியவில்லையே என ராமராஜு வருத்தம் அடைந்தார்.

இந்நிலையில், நேற்று நகரசபைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ராமராஜு எழுந்து, என்னை நம்பிய மக்களுக்கு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என ஆதங்கத்துடன் கூறிய அவர், திடீரென தான் அணிந்திருந்த செருப்பை எடுத்து தன்னைத்தானே சரமாரியாக அடித்துக் கொண்டார்.அதன்பின் கூட்டத்தில் இருந்து அழுதபடியே வெளியேறினார்.

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாததால் வருத்தமடைந்த கவுன்சிலர், தன்னைத்தானே செருப்பால் அடித்துக் கொண்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.