Tamilவிளையாட்டு

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் – 3ம் நாள் முடிவில் நியூசிலாந்து 6/440 ரன்கள் சேர்ப்பு

பாகிஸ்தான், நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் 438 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்திய கேப்டன் பாபர் அசாம் 161 ரன்னில் அவுட்டானார். ஆகா சல்மான் 103 ரன்னில் ஆட்டமிழந்தார். சப்ராஸ் அகமது 86 ரன்னில் வெளியேறினார்.

நியூசிலாந்து சார்பில் சவுத்தி 3 விக்கெட், அஜாஸ் பட்டேல், பிரேஸ்வெல், ஐஷ் சோதி தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இதையடுத்து, நியூசிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 165 ரன்கள் எடுத்திருந்தது. லாதம் 78 ரன்னுடனும், கான்வே 82 ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. டேவன் கான்வே 92 ரன்னில் அவுட்டானார். டாம் லாதம் சதமடித்து 113 ரன்னில் அவுட்டானார். டாம் லாதம், கான்வே ஜோடி முதல் விக்கெட்டுக்கு 183 ரன்கள் சேர்த்தது. அடுத்து இறங்கிய கேன் வில்லியம்சன் நிதானமாக ஆடி சதமடித்தார். டாம் பிளெண்டல் 47 ரன்னும், டேரில் மிட்செல் 42 ரன்னும் எடுத்தனர்.

மூன்றாம் நாள் முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 440 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் சார்பில் அப்ரார் அகமது 3 விக்கெட்டும், நவ்மான் அலி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.