Tamilசெய்திகள்

பாபநாசம் அணையில் 67.40 அடி நீர் இருப்பு உள்ளது

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை கோடை மழை பரவலாக பெய்து வந்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

கடந்த 2 நாட்களாக மழை குறைந்தது. இதன் காரணமாக அணைகளுக்கு வரும் நீரின் வரத்து குறைய தொடங்கியுள்ளது. இன்று காலை நிலவரப்படி பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் 67.40 அடி நீர் இருப்பு உள்ளது.

அணைக்கு தற்போது வினாடிக்கு 830.37 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 83.65 அடியும், சேர்வலாறு அணையில் 80.90 அடியும் நீர் இருப்பு உள்ளது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரு வாரத்தில் சுமார் 20 அடி வரை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கன்னடியன் கால்வாய் பகுதியில் வருகிற 1-ந் தேதியில் இருந்து பாசனத்திற்காக பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.

தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம் அருவி, செண்பகதேவி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. மெயினருவியில் நீண்ட வரிசையில் நின்று சுற்றுலா பயணிகள் குளித்து செல்கின்றனர்.

அடவிநயினார் அணை பகுதியில் 3 மில்லி மீட்டரும், தென்காசியில் 1.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இன்று காலை நிலவரப்படி கடனா அணையில் 43 அடியும், ராமநதி அணையில் 50.50 அடியும், கருப்பாநதி அணையின் 37 அடியும் நீர் இருப்பு உள்ளது. அடவிநயினார் அணையில் 55 அடி நீர் இருப்பு உள்ளது.