Tamilசெய்திகள்

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட சீட் வாங்குவதில் தீவிரம் காட்டும் காங்கிரஸ் தலைவர்கள்

தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. மேலிடத்துடன் பேசி வருகின்றன. இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள பிரதான கட்சியான காங்கிரஸ் கடந்த தேர்தலில் 9 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் தேனியை தவிர மற்ற தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இந்த தேர்தலிலும் கடந்த முறையை போல் 9 தொகுதிகளை காங்கிரசுக்கு ஒதுக்குவார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். அதேநேரம் இரண்டு புது முகங்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் கேட்டுள்ளார்கள். சிறுபான்மையினர் ஆணைய தலைவராக இருக்கும் பீட்டர் அல்போன்ஸ் பதவிக்காலம் இந்த ஆண்டு முடிகிறது. எனவே அவரும் சீட் கேட்டு பெறுவதில் தீவிரமாக உள்ளார். காங்கிரசை பொறுத்தவரை மூத்த தலைவர் மட்டுமல்லாமல் மிகச்சிறந்த பேச்சாளர் ஆவார். எனவே அவரை போன்றவர்கள் பாராளுமன்றத்துக்குள் செல்ல வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் விரும்புகிறது.

மேலும் மூத்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு தனது மகன் கார்த்திக்குக்கும் சீட் கேட்டுள்ளார். சேலத்தில் ஒரு தொகுதி வேண்டும் என்று அவர் தீவிரமாக முயற்சித்து வருகிறார். ஏற்கனவே இருக்கும் 8 எம்.பி.க்கள், புதிதாக 2 பேர் என்ற வகையில் கூடுதலாக ஒரு தொகுதியை கேட்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது.

இது பற்றி காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கேட்ட போது:- தேனி தொகுதி கடந்த தேர்தலில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த தொகுதியில் மட்டும் காங்கிரஸ் தோற்றது. எனவே அந்த தொகுதி கிடைப்பதில் பிரச்சினை இருக்காது. தங்கபாலு மகனுக்காக கூடுதலாக ஒரு சீட்டை கேட்கிறார்கள். அது எந்த சீட் என்பது தான் தெரியவில்லை என்றார்.