Tamilசெய்திகள்

புதுச்சேரியில் விடிய விடிய கனமழை – பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்தம் வலுபெற்று தாழ்வு மண்டலமாக மாறி வருகிறது. இதனால் தமிழக மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதோடு கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகம் மாறுபாடு காரணமாகவும் புதுவை- காரைக்கால் பகுதியில் வருகிற 19-ந் தேதி வரை மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2 நாட்கள் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என தடை விதிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக புதுவை, காரைக்காலில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை முதலே புதுவையில் வானம் மப்பும் மந்தாரமாக இருண்டு இருந்தது. ஆனால் மழை பெய்யவில்லை. சுமார் 6 மணி அளவில் லேசான சாரல் மழை பெய்தது. இரவு 8 மணிக்கு கன மழை பெய்தது. சுமார் 1½ மணி நேரம் மழை கொட்டியது. இரவு 11 மணிக்கு தொடங்கிய மழை விடிய விடிய தொடர்ந்து பெய்தது. இதனால் புதுச்சேரியின் முக்கிய சாலைகளான புஸ்சி வீதி, காந்தி வீதி, பாரதி வீதி, சின்னசுப்புராய பிள்ளை வீதி உள்ளிட்ட பல தெருக்களிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.

மழையால் வழக்கமாக பாதிக்கப்படும் ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர், பாவாணன் நகர், நடேசன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியது. ஒரு சில வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. புதுச்சேரியில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இன்றும் (செவ்வாய்கிழமை) காலை முதல் மழை பெய்த வண்ணம் உள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. மேலும் தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.