Tamilசெய்திகள்

புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் மரணம்

புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சர் ப.கண்ணன். அவருக்கு வயது 74. இவர் ரத்த அழுத்த குறைவு, நுரையீரல் தொற்று மற்றும் சுவாச கோளாறு காரணமாக புதுச்சேரி மூலக்குளத்தில் உள்ள ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.இந்தநிலையில் நேற்று இரவு ப.கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் நிமோனியா காய்சல் மற்றும் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் நேற்று இரவு 9.51 மணிக்கு அவர் காலமானார். ஏற்கனவே அவர் 5 ஆண்டுகளாக நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி வைசியாள் வீதியில் ப.கண்ணன் குடும்பத்துடன் வசித்து வந்தார். பெற்றோர் பழனிசாமி- காமாட்சியம்மாள். ப.கண்ணனுக்கு சாந்தி என்ற மனைவியும், பிரியதர்ஷினி என்ற மகளும், விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர். பள்ளி படிப்பை அவர் புதுச்சேரி பெத்தி செமினார் பள்ளியிலும், பட்ட படிப்பை தாகூர் கலைக்கல்லூரியிலும் முடித்தார். பெருந்தலைவர் காமராஜரின் கொள்கை மற்றும் அவரது அரசியல் நேர்மை ஆகியவற்றின் மீது கொண்ட தீராத பற்றால் 1970-ம் ஆண்டு மாணவர் காங்கிரசில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடர்ந்தார். மேடை பேச்சு மூலம் மக்களை கவர்வதில் வல்லவர். மாணவர் காங்கிரசின் பணியாற்றிய அனுபவமும், கட்சி தலைவர்களின் ஒத்துழைப்பும் ஒரு கட்டத்தில் கண்ணனை இளைஞர் காங்கிரஸ் தலைவராக்கியது.

1985-ல் காசுக்கடை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கண்ணன், அப்போது பரூக் மரைக்காயர் தலைமையில் அமைந்த காங்கிரஸ் ஆட்சியில் சுகாதாரம் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரானார். பின்னர் 1991-ல் நடந்த சட்டசபை தேர்தலில் லாஸ்பேட்டை தொகுதியில் வெற்றி பெற்று, வைத்திலிங்கம் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் சபாநாயகராக பதவி வகித்தார். 1996-ல் ஜி.கே. மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கியபோது, கண்ணன் புதுச்சேரியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கி போட்டியிட்டு வெற்றி பெற்று, 6 சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஜானகிராமன் தலைமையிலான கூட்டணி அரசில் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

பின்னர் புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். 2001-ல் நடந்த சட்டசபைக்கான தேர்தலில் தான் போட்டியிடாமல் புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் சார்பாக 4 சட்டமன்ற உறுப்பினர்களை வெற்றி பெற வைத்தார். அதையடுத்து காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியை புதுச்சேரிக்கு அழைத்து, ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் காங்கிரசில் தன்னை மீண்டும் இணைத்து கொண்டார். 2006-ல் புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் என்ற பெயரில் மீண்டும் தனிக்கட்சி தொடங்கி 3 சட்டமன்ற உறுப்பினர்களை வெற்றி பெற வைத்தார். பின்னர் 29.8.2009 அன்று புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் முழு விருப்பத்திற்கேற்ப காங்கிரஸ் கட்சியில் கண்ணன் 3-வது முறையாக இணைந்தார். அவர் 2009 செப்டம்பர் 26-ந்தேதி போட்டியின்றி மேல்சபை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன்பின் காங்கிரஸ் கட்சியில் விலகி அடுத்தடுத்து அ.தி.மு.க., பா.ஜனதாவில் இணைந்தார். தொடர்ந்து கட்சி மாறியதால் அரசியலில் அவர் வீழ்ச்சியை சந்திக்க நேர்ந்தது. கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அவர் தீவிர அரசியலில் இருந்து விலகினார்.

கண்ணனின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைசியாள் வீதியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) இறுதி சடங்கிற்கு பின், கருவடிக்குப்பம் மயானத்தில் மாலை 4 மணியளவில் உடல் தகனம் செய்யப்படுகிறது.