Tamilசெய்திகள்

பைசர் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி

அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனமும் இணைந்து கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கி உள்ளன. இந்த தடுப்பூசி 95 சதவீதம் பயன் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பைசர் நிறுவன தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு பிரிட்டன் அரசு முதலில் அனுமதி அளித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது. அதன்பின்னர் பஹ்ரைன், கனடா போன்ற நாடுகளும் அனுமதி அளித்தன.

இதேபோல் பைசர் தடுப்பூசியை பயன்படுத்துவதற்கான அனுமதி பெற அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் (எப்டிஏ) விண்ணப்பித்தருந்தனர். உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் வல்லுநர் குழுவினர், இந்த மருந்தின் செயல்திறன் குறித்தும், பரிசோதனை முடிவுகளையும் பரிசீலனை செய்தனர். பின்னர், மருந்தை அவசர தேவைகளுக்கு பயன்படுத்த அங்கீகாரம் அளிக்கலாம் என அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

இதையடுத்து பைசர் தடுப்பூசிக்கு சில நாட்களுக்குள் அங்கீகாரம் கிடைக்கும் என்றும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தடுப்பூசி போடும் முதற்கட்ட பணிகள் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும்.