Tamilசெய்திகள்

போலி செய்திகளால் தான் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் சென்றனர் – மத்திய அரசு

மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மாலா ராய், எழுத்துப்பூர்வமாக ஒரு கேள்வியை முன்வைத்தார். அதில், கொரோனா பெருந்தொற்றை சமாளிக்க மார்ச் 25ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பு, புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பாதுகாக்க மத்திய அரசு எடுத்த நடவடிககைகள் குறித்தும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஊர் செல்லும் வழியில் இறப்பதற்கான காரணங்கள் குறித்தும் அரசு விளக்கம் அளிக்கும்படி கேட்டுக்கொண்டிருந்தார்.

இதற்கு உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் அளித்த பதிலில், புலம்பெயர்ந்தோர் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி செல்வதற்கு முக்கிய காரணம் போலி செய்திகள்தான் என்று கூறி உள்ளார்.

‘ஊரடங்கு காலம் குறித்த போலி செய்திகளால் ஏற்பட்ட பீதியால் அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இடம்பெயர்ந்தனர். மேலும் மக்கள், குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், உணவு, குடிநீர், சுகாதார சேவைகள் மற்றும் தங்குமிடம் போன்ற அடிப்படை தேவைகள் பற்றி கவலைப்பட்டனர்.

எனினும், மத்திய அரசு இதை முழுமையாக அறிந்திருந்தது. தவிர்க்க முடியாத ஊரடங்கு காலகட்டத்தில், எந்தவொரு குடிமகனும் உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்காமல் இருக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது’ என மத்திய மந்திரி நித்யானந்த் ராய் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.