Tamilசெய்திகள்

மராத்தா இடஒதுக்கீடு தொடர்பான போராட்டத்தில் அரசு பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்டது – மகராஷ்டிராவில் பரபரப்பு

மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு தொடர்பாக மாநில அரசுக்கு எதிராக மகாராஷ்டிரா மாநிலத்தில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மகாராஷ்டிராவின் ஜல்னா மாவட்டத்தில் இன்று பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கை பராமரிக்க அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலையில் ஜல்னா மாவட்டத்தில் உள்ள தீர்த்தபுரி நகரின் சத்ரபதி சிவாஜி மஹராஜ் சவுக்கில் போராட்டக் குழுவினர் அரசு பஸ்சை தீ வைத்து எரித்தனர். இதில் அந்த பஸ் கொளுந்து விட்டு முழுவதும் எரிந்து நாசமானது.
இதைதொடர்ந்து ஜல்னா மாவட்டத்தில் அரசு பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டன. இந்த சம்பவத்திற்குப் பிறகு, மறு அறிவிப்பு வரும் வரை பஸ்களை இயக்க மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (MSRTC)தடை விதித்துள்ளது. பஸ் தீ வைப்பு சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் மீது நடவடிக்கை கோரி உள்ளூர் காவல் நிலையத்தில் அம்பாட் பஸ்டெப்போ மேலாளர் புகார் அளித்துள்ளார்.

தொடர்ந்து அங்கு நடைபெற்று வரும் போராட்டத்தையடுத்து சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் அம்பாட் தாலுகாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.