Tamilசெய்திகள்

முதலமைச்சர் வேட்பாளர் யார்? – என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பதில்

அரசியல் பயணமாக புதுவை வந்த பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா நேற்று மதியம் அக்கார்டு ஓட்டலில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் மதிய உணவு சாப்பிட்டார். இதில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி, என்.எஸ்.ஜெ. ஜெயபால் எம்.எல்.ஏ. முன்னாள் எம்.பி. ராதாகிரு‌‌ஷ்ணன், அ.தி.மு.க. கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ, மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்திசேகர், கோகுலகிரு‌‌ஷ்ணன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், அசனா ஆகியோர் கலந்துகொண்டனர்.

மதிய உணவுக்கு பின்னர் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஜே.பி. நட்டா ஆலோசனை நடத்தினார். அப்போது புதுவை மாநில அரசியல் நிலவரம் குறித்தும், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்தும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இந்த கூட்டம் சுமார் 20 நிமிடம் நீடித்தது.

கூட்டம் முடிந்த பிறகு வெளியே வந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமியிடம் நிருபர்கள் கேட்டபோது, பா.ஜ.க தலைவர் ஜே.பி. நட்டாவை நாங்கள் மரியாதையின் நிமித்தமாக சந்தித்து பேசினோம் என்றார். கூட்டணியில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார் என கேட்டபோது, ‘அது குறித்து பின்னர் பேசி முடிவு செய்யப்படும்’ என்று தெரிவித்தார்.