Tamilவிளையாட்டு

முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் பிஷன்சிங் பெடி மரணம்

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் பிஷன்சிங் பெடி. இவர் வெங்கட்ராகவன், பி.எஸ்.சந்திரசேகர், பிரசன்னா ஆகியோருடன் இணைந்து சுழற்பந்தில் கலக்கியவர் ஆவார். பிஷன்சிங் பெடி நீண்ட காலமாக உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 77 ஆகும்.

பிஷன்சிங் பெடி மறைவுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிஷன்சிங் பெடி 1967 முதல் 1979-ம் ஆண்டு வரை சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். அவர் 67 டெஸ்டில் விளையாடி 266 விக்கெட் வீழ்த்தி உள்ளார். 98 ரன் கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தியது பெடியின் சிறந்த பந்து வீச்சாகும்.

ஒரு டெஸ்டில் 194 ரன் கொடுத்து 10 விக்கெட் கைப்பற்றியது சிறந்த பந்து வீச்சாகும். 14 தடவை 5 விக்கெட்டுக்கு மேலும், ஒரு முறை 10 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளார். 10 ஒருநாள் போட்டியில் விளையாடி 7 விக்கெட் எடுத்தவர். இடதுகை சுழற்பந்து வீரரான அவர் இந்திய அணிக்காக 22 டெஸ்டுக்கு கேப்டனாக பணியாற்றி உள்ளார்.

1990-களில் பிஷன்சிங் பெடி இந்திய அணிக்கு பயிற்சியாளராகவும் பணியாற்றி இருந்தார். 1970-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும், 2004-ம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளருக்கான சி.கே.நாயுடு விருதையும் பெற்று இருந்தார்.