Tamilசெய்திகள்

முஸ்லீம் லீக் பற்றிய பிரதமர் மோடியின் பேச்சு – தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது காங்கிரஸ்

பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில் “காங்கிரஸ் கட்சி நேற்று தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் இருந்த முஸ்லிம் லீக்கின் சிந்தனையுடன் ஒத்துடையதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உள்ளது. மேலும் கம்யூனிஸ்டு மற்றும் இடது சாரி சிந்தனைகள் மேலோங்கி உள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், காங்கிரஸின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் அறிக்கை போல் இருப்பதாக மோடி கூறிய விமர்சனத்திற்கு எதிராக இந்திய தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சல்மான் குர்ஷித், முகுல் வாஸ்னிக், பவன் கெரா உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரில், “பிரதமரின் பேச்சுகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானதாக உள்ளது. முஸ்லீம் லீக் கட்சியை தங்களது தேர்தல் அறிக்கையுடன் ஒப்பிட்டு மோடி பரப்புரையில் ஈடுபடுகிறார். மத அரசியலை முன்வைத்து நாட்டில் பிளவுவாதத்தை தூண்டும் வகையில் பிரதமர் மோடி பேசி வருகிறார். இவ்வாறு மோடி பிரச்சாரம் செய்வதை தடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.