Tamilசெய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை – பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவிப்பு

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாசன வசதி பெறுகின்றன. அதாவது சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, உள்பட 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த பாசனத்தின் மூலம் குறுவை, சம்பா, சாளடி ஆகிய முப்போக விளைச்சல் நடைபெறுகிறது. மேலும் குடிநீர் ஆதாரமாகவும் மேட்டூர் அணை விளங்குகிறது.

தென்மேற்கு பருவமழை கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் தீவிரமடையும் போது, அங்குள்ள அணைகள் நிரம்பும். இதைத்தொடர்ந்து அங்குள்ள அணைகளில் இருந்து காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீர், தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் வந்து, அங்கிருந்து மேட்டூரை வந்தடையும்.

இதன்பின்னர் பாசனத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். அணையின் நீர் இருப்பை பொறுத்து ஜூன் 12-ந் தேதியோ அல்லது கால தாமதமாகவோ தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஒரு மாத காலம் தாமதமாக ஜூலை 19-ந் தேதி அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் 12-ந் தேதி சரியான காலத்தில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன்பின்னர் இதுவரை ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை.

நேற்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 47.33 அடியாக (மொத்த கொள்ளளவு 120 அடி) இருந்தது. அணைக்கு வினாடிக்கு 51 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. தண்ணீர் குறைந்துள்ளதால் அணை குட்டை போல காட்சி அளிக்கிறது.

அணையின் நீர்மட்டம் குறைந்தபட்சம் 60 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 30 ஆயிரம் கன அடிக்கு மேல் இருந்தால் மட்டுமே அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்க சாத்தியக்கூறுகள் ஏற்படும். ஆனால் மே மாதத்தில் தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு இதுவரை தொடங்கவில்லை. இந்த சூழ்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளதாக தெரிகிறது.

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

மேட்டூர் அணையில் நீர்மட்டம் மிகவும் குறைவாக உள்ளது. அதே நேரத்தில் தென்மேற்கு பருவமழையும் தொடங்காமல் தாமதமாகி வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து குறைந்து கொண்டே வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை. இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லியில் நடைபெற உள்ள காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்க ஆணையம் வழிவகுத்தால் மட்டுமே தண்ணீர் திறக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

காவிரி டெல்டா பாசனத்துக்காக இந்த ஆண்டு ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என்பதால், டெல்டா பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *