Tamilசெய்திகள்

ரஷ்ய கட்டுப்பாட்டில் இருக்கும் உக்ரைன் பகுதிகளுக்கு திடீர் விசிட் அடித்த அதிபர் புதின்

உக்ரைன் நாட்டின் மீதான ரஷியாவின் போர் ஓர் ஆண்டை கடந்த பிறகும் முடிவில்லாமல் நீண்டு வருகிறது. இந்த போரில் ரஷியாவின் பல பகுதிகள் ரஷிய படைகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன. அந்த வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜாபோர்ஷியா ஆகிய 4 பிராந்தியங்களை ரஷிய தன்னுடன் இணைத்து கொண்டது. சட்டவிரோதமான செயல் என கூறி ரஷியாவின் இந்த நடவடிக்கையை உலக நாடுகள் நிராகரித்தன.

இந்த நிலையில் ரஷிய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் லுஹான்ஸ்க் மற்றும் கெர்சன் பிராந்தியங்களுக்கு நேற்று ரஷிய அதிபர் புதின் திடீர் பயணமாக சென்றார். ஹெலிகாப்டர் மூலம் கெர்சன் பிராந்தியத்துக்கு சென்ற புதின் அங்குள்ள ராணுவ தலைமையகத்துக்கு சென்று, மூத்த ராணுவ அதிகாரிகளை சந்தித்து களநிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

அதை தொடர்ந்து, லுஹான்ஸ்க் பிராந்தியம் சென்ற புதின் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். இரண்டு இடங்களிலும், ஆர்த்தடாக்ஸ் ஈஸ்டர் பண்டிகையையொட்டி ராணுவ வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த புதின், அவர்களுக்கு நினைவு பரிசுகளையும் வழங்கினார்.