Tamilசெய்திகள்

ராகுல் காந்தியை கிண்டல் செய்து வீடியோ வெளியீடு – பா.ஜ.கவினர் மீது வழக்கு தொடர்ந்த காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை கேலி செய்யும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோ பதவிட்டதால் கர்நாடக மாநில போலீஸ், பா.ஜனதாவின் ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா மீது மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் பல்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொள்வோம் என பா.ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.

அனிமேசன் செய்யப்பட்டுள்ள அந்த வீடியோவில் ராகுல் காந்தியை கேலி செய்வது போன்ற காட்சிகளும், காங்கிரஸ் கட்சியின் மோசமான நிலையை எடுத்துக்காட்டும் காட்சிகளும் இடம் பிடித்துள்ளன.

”ராகுல் காந்தி ஆபத்தான மற்றும் நயவஞ்சக விளையாட்டை விளையாடுகிறார். மோடியின் பெயரை கலங்கப்படுத்துவதற்காக, வெளிநாட்டில் இந்தியாவை அவமானப்படுத்துவதில் இருந்து பின்வாங்கவில்லை” உள்ளிட்ட கருத்துக்களை பதிவிட்டிருந்தார். எப்.ஐ.ஆர். பதிவு செய்த உடன் அதே டுவிட்டருக்கு ரிப்ளையில் ”ராகுல் காந்தி வெளிநாட்டு சக்திகளின் கைக்கூலி” எனக் குறிப்பிட்டிருந்தார்.

கர்நாடக மாநில போலீசாரின் இந்த நடவடிக்கையால் உண்மையை நசுக்க அதிகார துஷ்பிரயோகம் என பா.ஜனதா தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கூறுகையில் ”அதிகாரத்திற்கு வந்தால் உண்மையை நசுக்க அதிகாரத்தை எப்படி துஷ்பிரயோகம் செய்ய முடியும் என்பதை காந்தி குடும்பம் நிரூபித்து விட்டது” என்றார்.

தெற்கு பெங்களூரு மக்களவை எம்.பி. தேஜஸ்வி சூர்யா ”அரசியல் உள்நோக்கத்தோடு அமித் மால்வியாவுக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. குழுக்கள் (பிரிவு) இடையே பகையை வளர்ப்பது உள்ளிட்ட பிரிவில் வழக்கு போடப்பட்டுள்ளது. அப்படியென்றால், ராகுல் காந்தில் என்றால் என்ன? தனி நபரா? அலலது ஒரு குழுவா? அல்லது ஒரு பிரிவா?. இந்த வழக்கை நாங்கள் நீதிமன்றத்தில் சந்திப்போம்” என்றார்.

பா.ஜனதா தேசிய செய்தி தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா ”சட்ட விதிகளை தவறாக பயன்படுத்துவதை விட இதில் வேறு ஏதுமில்லை. ராகுல் காந்தி பாதிக்கப்பட்டிருந்தால், நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும்” என்றார்.