Tamilசெய்திகள்

ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் இரண்டாவது மனைவி சரண்

பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா மாதநாயக்கனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட காரோ கியாதனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுவாமிராஜ்(வயது 46). இவரது முதல் மனைவியின் பெயர் சத்யகுமாரி. 2-வது மனைவியின் பெயர் நேத்ரா(35). சுவாமிராஜ் ரியல்எஸ்டேட் அதிபர் ஆவார். நேத்ராவை கடந்த 2 ஆண்டுக்கு முன்பு தான் சுவாமிராஜ் திருமணம் செய்திருந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சுவாமிராஜிக்கும், நேத்ராவுக்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த நேத்ரா வீட்டில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து கணவர் சுவாமிராஜை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், தலையில் பலத்தகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

பின்னர் மாதநாயக்கனஹள்ளி போலீஸ் நிலையத்திற்கு சென்ற நேத்ரா, தனது கணவரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்து விட்டதாக கூறி சரண் அடைந்தார். மேலும் உறவினர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவரது ஆசைக்கு இணங்கும்படி கணவர் கூறியதால் ஏற்பட்ட தகராறில் கொலை செய்து விட்டதாகவும் போலீசாரிடம் நேத்ரா கூறி இருப்பதாக தெரிகிறது. உடனே சுவாமிராஜின் வீட்டுக்கு போலீசார் விரைந்து சென்றனர்.

அங்கு தலையில் பலத்த காயங்களுடன் சுவாமிராஜ் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர். அப்போது ரியல்எஸ்டேட் மூலமாக ஏராளமான சொத்துகளை சுவாமிராஜ் சேர்த்து வைத்திருந்தார். அவரிடம் ஏராளமான சொத்துகளும் இருந்துள்ளது. அதே நேரத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே சுவாமிராஜிம், நேத்ராவும் திருமணம் செய்யாமலேயே கணவன், மனைவிபோல் வாழ்ந்து வந்துள்ளனர்.

ஆனால் சுவாமிராஜிடம் இருக்கும் சொத்துகளுக்கு ஆசைப்பட்டு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக தான் அவரை நேத்ரா திருமணம் செய்ததாகவும் கூறப்படுகிறது. அத்துடன் தனது கணவரிடம் இருக்கும் சொத்துகளை அபகரிக்க நேத்ரா முயன்றதாகவும், அதனால் ஏற்பட்ட தகராறில் தான் கணவரை கொலை செய்திருப்பதாகவும் சத்யகுமாரி மாதநாயக்கனஹள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து மாதநாயக்கனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து நேத்ராவை கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொலை சம்பவம் நெலமங்களாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.