Tamilசெய்திகள்

ரேஷன் கடை ஊழியர்களையும் முன்களப் பணியாளர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் – அரசுக்கு கோரிக்கை

தமிழ்நாடு கூட்டுறவு நியாய விலைக்கடை அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தொ.மு.ச. பொன்னுராம், சி.ஐ.டி.யு. கிருஷ்ணமூர்த்தி, ஐ.என்.டி.யு.சி. அன்பழகன், டி.டி.யு.சி. தணிகாச்சலம் ஆகியோர் தமிழக அரசுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

கொரோனா தொற்று தீவிரம் அடைந்துள்ள இந்த சூழலிலும் நியாயவிலைக் கடை ஊழியர்கள் மனதில் உறுதியுடன் முதல்-அமைச்சர் ஆணையின் படி வீடு வீடாக சென்று டோக்கன் வழங்குவது, உரிய கட்டுப்பாடுகளுடன் நிவாரண தொகை வழங்குவது மற்றும் பொது விநியோக திட்டப் பணிகளை செய்து வருகின்றனர்.

அரசின் ஊரடங்கு அறிவிப்பு, வாகன வசதி இல்லாத நிலையிலும் நியாயவிலைக் கடை ஊழியர்கள் மிகுந்த சிரமத்துடன், நாள் தவறாது பணிக்கு வந்து எளிய மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய அரசுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

பேரிடர் காலத்தில் அரசு அறிவிக்கும் அனைத்து திட்டங்களையும், நோய் தொற்றுக்கு அஞ்சாது முன் களப்பணியாளர்களாக பணியாற்றி வரும் நியாயவிலைக் கடை ஊழியர்கள், நகர்வு பணி ஊழியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களை அரசின் ‘முன்களப் பணியாளர்களாக’ அறிவிக்கவும், சிறப்பு ஊதியம், பயண செலவு அனுமதித்து வழங்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.