Tamilவிளையாட்டு

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டி20 போட்டி – தென் ஆப்பிரிக்கா சாதனை வெற்றி

தென்ஆப்பிரிக்கா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 258 ரன்கள் குவித்தது. 20 ஓவர் போட்டியில் அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

பின்னர் 259 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்கா தொடக்க ஆட்டக்காரர்கள் குயின்டான் டி காக்கும், ரீஜா ஹென்ரிக்சும் பதிலடி கொடுத்தனர். இது நேரடி போட்டியா அல்லது ஹைலெட்சா என்ற சந்தேகப்படும் அளவுக்கு அவர்கள் பவுண்டரியும், சிக்சருமாக பந்தை இடைவிடாது தெறிக்கவிட்டனர். குறிப்பாக டி காக் எதிரணியின் பந்து வீச்சாளர்களை விழிபிதுங்க வைத்தார்.

டிகாக்- ஹென்ரிக்ஸ் ஜோடி ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 102 ரன்கள் திரட்டியது. 20 ஓவர் போட்டியில் ‘பவர்-பிளே’யில் 100 ரன்னுக்கு மேல் எடுத்த முதல் அணி தென்ஆப்பிரிக்கா தான். இந்த ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 259 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது.

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு அணி விரட்டிப்பிடித்த அதிகபட்ச இலக்கு (சேசிங்) இது தான். இதற்கு முன்பு 2018-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா 244 ரன் இலக்கை வெற்றிகரமாக எட்டிப்பிடித்ததே அதிகபட்ச சேசிங்காக இருந்தது. அதை முறியடித்து தென்ஆப்பிரிக்கா சரித்திரம் படைத்திருக்கிறது.

இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சேர்ந்து மொத்தம் 515 ரன்கள் எடுத்ததும் சாதனையாகும். இதில் 81 பவுண்டரியும், 35 சிக்சரும் அடங்கும். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் தென்ஆப்பிரிக்கா 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது.

முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றிருந்தது. கடைசி 20 ஓவர் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நாளை நடக்கிறது.