10-ம் வகுப்பு தேர்வை ஒத்தி வைக்க கோரி வழக்கு – தமிழக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன. இந்தநிலையில் கல்வியாளரும், முன்னாள் துணைவேந்தருமான வசந்திதேவி அதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ஜூன் 15-ந் தேதி தொடங்கும் என அரசு அறிவித்துள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் பெருநகரங்களிலும், நகரங்களிலும் வசிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்படுகிறது. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுத உள்ள சுமார் 9½ லட்சம் மாணவர்களில் 5½ லட்சம் பேர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிப்பவர்கள் ஆவார்கள்.
விடுதிகளில் தங்கிப்படித்த மாணவர்களில் பலர் புத்தகங்களை விடுதியில் விட்டுவிட்டு சொந்த கிராமங்களுக்கு சென்று விட்டநிலையில், அவர்களால் தேர்வுக்கு தயாராக முடியாது. பொதுப்போக்குவரத்து இல்லாத சூழலில் வேறு எங்கும் சென்று புத்தகங்கள் வாங்க முடியாது. கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் ஜூன் 15-ந் தேதி தேர்வை தொடங்கினால் மாணவர்களின் நலன் பாதிக்கப்படும். எனவே, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை தள்ளி வைக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், அனிதா சுமந்த் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் வைகை, பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு சிறப்பு வக்கீல் சி.முனுசாமி ஆகியோர் ஆஜராகி வாதாடினர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை எழுத உள்ள மாணவர்கள் மற்றும் தேர்வுப்பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தங்களது விளக்கத்தை ஜூன் 11-ந் தேதிக்குள் விரிவான அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.