10-ம் வகுப்பு தேர்வை ஒத்தி வைக்குமாறு கோரிக்கை விடுத்த ஜாக்டோ-ஜியோ அமைப்பு!
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ஜூன் மாதம் 1-ந்தேதி தொடங்கும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சமீபத்தில் அறிவித்தார். இதற்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பை பிரதமர் விரைவில் வெளியிட உள்ளார். இப்படி இருக்கும் நேரத்தில், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என்று அறிவித்து இருக்கிறார். இந்த அறிவிப்பு லட்சக்கணக்கான மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊரடங்கு குறித்து முழுமையான முடிவை மத்திய-மாநில அரசுகள் எடுக்காதபோது, அமைச்சரின் இந்த அறிவிப்பானது மிகவும் கண்டனத்துக்குரியது. நோய்த்தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள் தேர்வுக்கு தயாராகக்கூடிய சூழ்நிலையில் இல்லை. கொரோனா பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து தேர்வு மையத்துக்கு மாணவர்கள் எவ்வாறு வருவார்கள் என்பது கேள்விக்குறி.
பிள்ளைகளை தேர்வுக்கு அனுப்பக்கூடிய பெற்றோரும், தங்கள் குழந்தைக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுவிடுமோ? என்ற அச்சத்திலேயே இருப்பார்கள். ஏற்கனவே பிளஸ்-2 பொதுத்தேர்வின் இறுதிநாள் தேர்வை சிலர் எழுத முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது. இதுதவிர விடைத்தாள் திருத்தும் பணியானது வரும் 27-ந்தேதி தொடங்கும் என்ற அறிவிப்பும் ஆசிரியர் மத்தியில் பெரும் குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது.
எனவே ஊரடங்கு நிறைவுபெற்று, நோய்த்தொற்றின் தீவிரம் குறைந்த பின்னர், மாணவர்கள் தேர்வை எதிர்கொள்வதற்கான உரியகால அவகாசத்தினையும், உளவியல் ரீதியான ஆலோசனைகளையும் வழங்கி பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்கிறோம். அதுவரை மாணவர்கள் நலன்கருதி, பொதுத்தேர்வு முடிவை ஒத்திவைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பொதுத்தேர்வு முடிவை ஒத்திவைக்காமல் இருக்கும்பட்சத்தில், அடுத்த கட்டமாக விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்கவும் ஜாக்டோ-ஜியோவில் அங்கம் வகிக்கும் சில ஆசிரியர் சங்கங்கள் திட்டமிட்டு இருக்கின்றன. ஜாக்டோ-ஜியோ அமைப்பின் அடுத்த கூட்டம் இன்னும் ஓரிரு நாட்களில் நடைபெற உள்ளது. அதற்குள் அரசு தேர்வை ஒத்திவைக்காவிட்டால், அந்த கூட்டத்தில் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிப்பது உள்பட பல்வேறு முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் தெரிவித்தனர்.