100- திரைப்பட விமர்சனம்
இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத போலீஸ் கண்ட்ரோல் ரூமை மையப்படுத்தி வெளியாகியிருக்கும் ‘100’ எப்படி என்பதை பார்ப்போம்.
அவசரத்திற்கும், ஆபத்திற்கும் 100-க்கு போன் போட வேண்டும் என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால், 100 என்ற எண்ணுக்கு இருக்கும் தனித்துவத்தைப் பற்றியும், அதற்காக பணியாற்றும் காவல் துறையின் பின்னணி குறித்தும், அறியாத பல தகவல்களை கருவாக வைத்துக் கொண்டு இயக்குநர் சாம் ஆண்டன் ஒரு சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் கதையை சொல்லியிருக்கிறார்.
காக்கி சட்டையை போட்டதுமே குற்றவாளிகளை பந்தாட துடிக்கும் அதர்வாவுக்கு போலீஸ் கண்ட்ரோல் ரூமில் ஜாப் கிடைக்க, மனுஷன் அப்செட்டாவதோடு, போலீஸ் கண்ட்ரோல் ரூம் பணியின் மீது ஆர்வம் இல்லாமல் இருக்கிறார். 100-க்கு போன் செய்பவர்களில் யார் நிஜமாக ஆபத்தில் இருக்கிறார்கள், யார் விளையாட்டாக போன் செய்கிறார்கள், என்பதை கணிக்க முடியாமல் வேலை மீது ஆர்வம் இல்லாமல் இருக்கும் அதர்வாவுக்கு வரும் 100 வது காலில், பெண் ஒருவர் பயத்துடன் ”என்னை யாரோ கடத்திவிட்டார்கள், காப்பாற்றுங்கள்” என்று பேச, அந்த போன் கால் குறித்து விசாரிக்கும் போலீஸார் அது போலியான கால் என்று சாதாரணமாக விட்டுவிடுகிறார்கள்.
ஆனால், அதர்வாவோ ஆபத்தில் இருக்கும் அந்த பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடும் போது, காணாமல் போன பெண்கள் விஷயத்தில் பல அதிர்ச்சியான தகவல்கள் கிடைக்க, அதனை வைத்து பின் தொடரும் போது, பின்னணியில் பெரிய நெட்வொர்க் இருப்பதும் தெரிய வருகிறது. கண்ட்ரோல் ரூமில் இருந்தாலும், பெண்கள் விஷயத்தில் நடக்கும் குற்றத்தை கண்டுபிடிக்க களத்தில் இறங்கும் அதர்வா, அந்த நெட்வொர்க்கை எப்படி பிடிக்கிறார், அவர்களின் பின்னணி என்ன, எதற்காக பெண்களை கடத்துகிறார்கள், என்பது தான் படத்தின் மீதிக்கதை.
சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் ஜானர் படம் என்றாலும், படத்தின் முதல் பாதியை காதல், காமெடி என்று கமர்ஷியலாக நகர்த்தி செல்லும் இயக்குநர் சாம் ஆண்டன், இரண்டாம் பாதி முழுவதையும் விறுவிறுப்போடும் பல திருப்புமுனைகளோடு நகர்த்தி செல்வதோடு, அடுத்து என்ன நடக்கும், யார் அந்த வில்லன், என்று ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பு ஏற்படுத்தும் விதமாகவும் நகர்த்தி செல்கிறார்.
அதர்வா பார்ப்பதற்கு கல்லூரி மாணவர் போல இருந்தாலும், அவரது மீசையும், உடல் வாகும் போலீஸாக அவரை ஏற்றுக்கொள்ள வைத்துவிடுகிறது. ஆனால், அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்ததை தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏதோ டீயுசன் டீச்சரையும், பள்ளி மாணவரையும் பார்ப்பது போல இருக்கிறது அதர்வா – ஹன்சிகா ஜோடியை பார்த்தால். இருந்தாலும் ஆக்ஷன் காட்சிகளில் அதர்வா மிரட்டுகிறார். ஒவ்வொரு முறையும் தனது ஷூ லேஸ் கயிலும் போது, அதை போட்டுவிட்டு அதர்வா எடுக்கும் ஓட்டமும், அதன் பிறகு காட்டும் அதிரடியும் ரசிக்க வைக்கிறது.
யோகி பாபு வரும் காட்சிகள் அனைத்தும் காமெடி சரவெடியாக இருக்கிறது. போலீஸ் உடையில் அவரை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றாலும், கண்ட்ரோல் ரூமில் அவர் செய்யும் லூட்டிகள் அனைத்தும் பியூட்டியாக இருக்கிறது.
ராதாரவி, ஆடுகளம் நரேன், மைம் கோபி உள்ளிட்ட மூத்த நடிகர்கள் அவர்களது பணியை எப்போதும் போல சிறப்பாக செய்திருக்கிறார்கள். நடிகராக களம் இறங்கியிருக்கும் தயாரிப்பாளர் மகேஷ், கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருப்பதோடு, நடிப்பிலும் கவர்கிறார்.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ், ‘விக்ரம் வேதா’ படத்திற்கு பிறகு பின்னணி இசையில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை. இதிலும், ரெகுலரான பீஜியம் என்று சுமாரான பின்னணி இசையை தான் கொடுத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்த் படத்திற்கு பெரிய பலம் சேர்த்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளை படமாக்குவதில் தனித்துவத்தை காட்டியிருப்பவர், ரயில் ஆக்ஷன் காட்சியில் அசத்தியிருக்கிறார்.
அதர்வாவின் சினிமா பயணத்தில் இந்த 100 முக்கியமான படமாக இருக்கும் என்று சொன்னார்கள். அது உண்மை தான். அதர்வாவை வேறு ஒரு கட்டத்திற்கு இப்படம் அழைத்து செல்லும் விதத்தில் அமைந்திருக்கிறது.
சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் கதை என்றாலும் அதை ஆரம்பத்திலேயே சொல்லாமல், கமர்ஷியலுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கும் இயக்குநர் சாம் ஆண்டன், இரண்டாம் பாதியில் படத்தை வேறு லெவலுக்கு கொண்டு செல்கிறார். அதிலும், படத்தின் வில்லன் யார்? என்ற சஸ்பென்ஸை க்ளைமாக்ஸ் வரை நீட்டிக்க செய்திருப்பது படத்தின் மீதான சுவாரஸ்யத்தை அதிகரிக்க செய்கிறது.
இது தான் நடக்கும், என்று சில இடங்களில் யூகிக்க முடிந்தாலும், மறுபுறம் அடுத்து என்ன நடக்கும், எதற்காக செய்கிறார்கள், என்று நம்மை யோசிக்க வைக்கும் அளவுக்கு சஸ்பென்ஸ்களும் நிறைந்திருப்பதால் இரண்டாம் பாதி முழுவதும் சீட் நுணியில் உட்கார வைக்கிறது.
இரண்டாம் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு முதல் பாதியில் இல்லை என்றாலும், யோகி பாபுவின் காமெடி மற்றும் ஆக்ஷன் காட்சிகள் மூலம் ரசிகர்களை இயக்குநர் கட்டிப்போட்டு விடுகிறார். அதிலும் கடத்தப்பட்ட குழந்தையை மீட்கும் காட்சிகள் அதை தொடர்ந்து வரும் ஆக்ஷன் சீக்குவன்ஸ் எல்லாம் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
மொத்தத்தில், ‘100’ நிச்சயம் செஞ்சூரி போடும்.
-ஜெ.சுகுமார்