Tamilசெய்திகள்

20 மாநிலங்களில் நாளை முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது

நாடு முழுவதும் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 11-ந்தேதி (நாளை) தொடங்கி அடுத்த மாதம் 19-ந்தேதி வரை 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் ஆயுள் காலம் முடிகிற ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தலைப் பொறுத்தமட்டில், 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகள் நாளை (வியாழக்கிழமை) முதல் கட்ட தேர்தலை சந்திக்கின்றன.

அந்த மாநிலங்களிலும் அவற்றின் தொகுதிகள் எண்ணிக்கையும் வருமாறு:-

ஆந்திரா-25, அருணாசலபிரதேசம்-2, அசாம்-5, பீகார்-4, சத்தீஷ்கார்-1, காஷ்மீர்-2, மராட்டியம்-7, மணிப்பூர்-1, மேகாலயா-2, மிசோரம்-1, நாகலாந்து-1, ஒடிசா-4, சிக்கிம்-1, தெலுங்கானா-17, திரிபுரா-1, உத்தரபிரதேசம்-8, உத்தரகாண்ட்-5, மேற்கு வங்காளம்-2, லட்சத்தீவுகள்-1, அந்தமான் நிகோபார் தீவுகள்-1

பாராளுமன்ற தேர்தலில் முதல் கட்ட தேர்தலை நாளை சந்திக்கிற முக்கிய தலைவர்களில் உத்தரபிரதேசத்தில் இருந்து போட்டியிடும் மத்திய மந்திரிகள் வி.கே. சிங் (காசியாபாத்), மகேஷ் சர்மா (நொய்டா), சத்யபால் சிங் (பாக்பத்), ராஷ்ட்ரிய லோக்தளம் கட்சி தலைவர் அஜித் சிங் (முசாப்பர்நகர்) ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவர்.

மராட்டிய மாநிலத்தில் முதல் கட்ட தேர்தலை சந்திக்கிற தலைவர்களில் மத்திய மந்திரி நிதின் கட்காரி (நாக்பூர்), முன்னாள் மத்திய மந்திரியும் காங்கிரஸ் தலைவருமான சுஷில்குமார் ஷிண்டே (சோலாப்பூர்) உள்ளிட்டவர்கள் அடங்குவர்.

ஆந்திரா, அருணாசல பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய 4 மாநிலங்கள் சட்டசபை தேர்தலை சந்தித்தாலும், இவற்றில் ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய 3 மாநிலங்களில் மட்டும் அனைத்து தொகுதிகளிலும் ஒரே நாளில் நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது.

ஒடிசாவை பொறுத்தவரையில் முதல் கட்ட தேர்தலை சந்திக்கிற 4 பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டசபை தொகுதிகளில் மட்டும் நாளை முதல் கட்ட தேர்தல் நடக்கிறது.

சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்குதேசம் கட்சியின் ஆட்சி நடக்கிற ஆந்திராவில், ஆட்சியை தக்க வைக்க அவர் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதே நேரத்தில் ஆட்சியை அவரிடம் இருந்து பறிப்பதற்கு ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசும், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனாவும் முயற்சிக்கின்றனர். காங்கிரஸ், பாரதீய ஜனதா ஆகிய இரு கட்சிகளும் பெயரளவில்தான் களத்தில் உள்ளன.

அருணாசலபிரதேசத்தில் முதல்-மந்திரி பெமா காண்டு தலைமையில் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி நடக்கிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை மசோதா, பாரதீய ஜனதாவுக்கு எதிராக சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதைப் பயன்படுத்தி காங்கிரஸ் ஆட்சிக்கு வர முயற்சிக்கிறது.

ஒடிசாவில் முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதாதளம் கட்சி ஆட்சியை தக்க வைப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

சிக்கிமில் முதல்-மந்திரி பவன்குமார் சாம்லிங் தலைமையிலான சிக்கிம் ஜனநாயக முன்னணி (எஸ்.டி.எப்.) ஆட்சி நடக்கிறது. அங்கு சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சா கட்சி ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக முயற்சிக்கிறது.

91 பாராளுமன்ற தொகுதிகளிலும், 4 சட்டசபை தேர்தல்களிலும் அனல்பறக்கும் பிரசாரம் நேற்று மாலை ஓய்ந்தது.

பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜனதா கட்சித்தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டவர்கள் பிரசாரம் செய்தனர். வேட்பாளர்கள் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர்.

நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை இடைவெளியின்றி ஓட்டுப்பதிவு நடக்கிறது. வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்கு எந்திரங்களையும், ஒப்புகைச்சீட்டு வழங்கும் ‘விவிபாட்’ எந்திரங்களையும் எடுத்துச்செல்லும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

விரும்பத்தகாத நிகழ்வுகள் எதுவும் நடந்து விடாதபடிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *