Tamilவிளையாட்டு

3 நாடுகளில் நடக்கும் 2026 ஆம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டி

ஒலிம்பிக் போட்டிக்கு அடுத்து நடைபெறும் உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழா உலக கோப்பை கால்பந்து போட்டியாகும். ஒலிம்பிக்கை போலவே உலக கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது.

1930-ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. 2-வது உலக போர் காரணமாக 1942, 1946 ஆகிய ஆண்டுகளில் போட்டி நடைபெறவில்லை. இதுவரை 21 உலக கோப்பை போட்டிகள் நடந்துள்ளன. கடைசியாக 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடந்த போட்டியில் பிரான்ஸ் சாம்பியன் பட்டம் பெற்றது.

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டியை ஆசிய கண்டத்தில் உள்ள கத்தார் இந்த ஆண்டு நடத்துகிறது. நவம்பர் 21-ந்தேதி முதல் டிசம்பர் 18-ந்தேதி வரை அங்குள்ள 5 நகரங்களில் 8 மைதானங்களில் போட்டிகள் நடக்கிறது.

இந்த நிலையில் 2026-ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் இடங்களை சர்வதேச கால்பந்து சம்மேனம் இன்று அறிவித்தது. அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய 3 நாடுகளில் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடக்கிறது.

முதல் முறையாக உலக கோப்பை கால்பந்து போட்டியை 3 நாடுகள் இணைந்து நடத்துகிறது. அமெரிக்காவில் 11 நகரங்களிலும், மெக்சிகோவில் 3 நகரங்களிலும், கனடாவில் 2 நகரங்களிலும் போட்டி நடக்கிறது.

அமெரிக்காவில் போட்டி நடைபெறும் நகரங்கள் வருமாறு:-

நியூயார்க் அல்லது நியூஜெர்சி, லாஸ்ஏஞ்சல்ஸ், டல்லாஸ், கனாஸ்சிட்டி, ஹூஸ்டன், அட்லாண்டா, பில்டெல்பியா, சான் பிரான்சிஸ்கோ, பாஸ்டன், மியாமி, சியாட்டில்.

மெக்சிகோ நாட்டில் உள்ள மெக்சிகோ சிட்டி, மான்ட்டெரி, குதலஜாரா ஆகிய இடங்களிலும், கனடாவில் வான்கூவர், டொரண்டோ ஆகிய நகரங்களிலும் நடக்கிறது.

உலக கோப்பை கால்பந்து போட்டியை அமெரிக்கா 2-வது முறையாக நடத்துகிறது. இதற்கு முன்பு 1994-ம் ஆண்டு நடந்தது. இதேபோல் மெக்சிகோவில் 1970 மற்றும் 1986 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்று இருந்தது.

2026-ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் மொத்தம் 48 நாடுகள் பங்கேற்றுகின்றன. 16 நாடுகள் கூடுதலாக கலந்து கொள்கின்றன.