Tamilசெய்திகள்

80 வயதிற்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்கு செலுத்த அனுமதி – வழக்கு தொடர்ந்த திமுக

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து சென்னையில் இந்திய தேர்தல் ஆணைய உயர்மட்டக் குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனை முடிந்து செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணைய செயலர் உமேஷ் சின்கா, 80 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்த வசதி ஏற்படுத்தி தரப்படும் என்றார். விருப்பப்படும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இந்த வசதியை பயன்படுத்தலாம் என்றும் கூறினார்.

இதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 80 வயது நிரம்பிய வாக்காளர்கள் தபாலில் வாக்களிக்கும் புதிய திட்டத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில், தபால் வாக்கை வாக்குச்சாவடி அதிகாரி நேரில் சென்று பெற வேண்டும் என்பதால் இதில் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது என்பதால் இந்த திட்டத்தை ரத்து செய்ய உத்தரவிடவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

80 வயதுக்கு மேலான மூத்த குடிமக்கள் சிரமம் இன்றி வாக்களிக்கும் வகையில், தனியாக சிறப்பு வாக்குச்சாவடிகளை அமைக்க வேண்டும் என்றும் திமுக தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.