96 – திரைப்பட விமர்சனம்
விஜய் சேதுபதியும், திரிஷாவும் உருகி..உருகி…காதலித்திருக்கும் இந்த ‘96’ திரைப்படம் ரசிகர்களை உருக வைத்ததா என்பதை பார்ப்போம்.
டிராவல் போட்டோகிராபரான விஜய் சேதுபதி, தனது மாணவர்களுக்கு பாடம் நடத்திவிட்டு, தனது சொந்த ஊரான தஞ்சாவூர் வழியாக சென்னை வரும்போது, தனது பள்ளியை பார்க்கிறார். பள்ளி உள்ளே சென்று தனது பழைய ஞாபகங்களை நினைவில் கொண்டு வர, உடனே தனது நண்பர்களுக்கு போன் செய்து, தனது பள்ளி குறித்து பேச, உடனே அனைத்து நண்பர்களும் சந்திக்க முடிவு செய்கிறார்கள். அதன்படி 96 ஆம் வருடம் 10 வகுப்பு படித்த விஜய் சேதுபதி மற்றும் அவரது பள்ளி நண்பர்கள் அனைவரும் சென்னையில் சந்திக்க, அங்கே வரும் திரிஷாவை பார்த்ததும், விஜய் சேதுபதியின் காதல் நினைவுகள் மலர தொடங்குகிறது.
பாணு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரிஷாவுக்கும், ராம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையே பள்ளி பருவத்தில் ஏற்படும் காதல், பிரிவு, என்று நகரும் படம், திருமணமாகி ஒரு பெண் குழந்தைக்கு தாயான திரிஷா, திருமணம் செய்துகொள்ளாமல் தனது காதல் நினைவுகளோடு வாழும் விஜய் சேதுபதியை சந்திக்கும் போது, தனது காதல் உணர்வுகளை வெளிப்படையாக சொல்லவும் முடியாமல், அதே சமயம் அதை மறைக்கவும் முடியாமல் தவிக்க, அதே நிலையில் விஜய் சேதுபதியும் இருந்தாலும், திரிஷா வேறு ஒருவடைய மனைவி என்ற எல்லைக் கோடு இருப்பதையும் நினைவில் வைத்துக்கொண்டு, தனது காதல் நினைவுகளால் நொந்து நூடுல்ஸாக, அவர்களின் காதல் வலியை படம் பார்ப்பவர்களுக்கும் ஏற்பத்துவது தான் ‘96’ படத்தின் கதை.
போலீஸ், தாதா, முதியவர் என்று எந்த வேடமாக இருந்தாலும் அதில் கச்சிதமாக பொருந்தும் விஜய் சேதுபதி, முதல் முறையாக காதல் மன்னனாக நடித்து மகுடமும் சூடிக்கொண்டிருக்கிறார். நரைத்த முடி, தாடி என்று, கரடு முரடான தோற்றத்தில் இருந்தாலும், தனது காதல் உணர்வுகளை வெளிப்படுத்திய விதத்தில் நம்மை வெகுவாக கவர்கிறவர், அவ்வபோது தனது ரெகுலர் பார்மட் டைமிங் டயலாக் டெலிவரியாலும் அப்ளாஷ் வாங்குகிறார்.
கல்லூரி மாணவி அல்ல பள்ளி மாணவி வேடத்தில் நடிக்க வைத்தால் கூட பொருத்தமாகவே இருக்க கூடியவராக, இளமையோடு இருக்கும் திரிஷாவை, பார்த்துக்கொண்டு இருந்தால் பசி கூட எடுக்காது போல, அந்த அளவுக்கு கொள்ளை அழகோடு இருக்கிறார். தனது அறியாமையால் தான், தனது காதல் கைகூடாமல் போனது என்பதை அறிந்ததும், அழுது கதறும் திரிஷாவின் நடிப்புக்கு ஆயிரம் பொக்கே கொடுக்கலாம்.
விஜய் சேதுபதி – திரிஷா ஜோடி தங்களது காதல் நினைவுகளால், ரசிகர்களை ஐஸ் கட்டியாக உருக வைக்க, அவர்களது பள்ளி பருவ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆதித்யா பாஸ்கர் – கெளரி ஜி.கிருஷ்ணா ஜோடியின் காதலும், அவர்களது மெளன மொழியும் நம்மை தென்றலாக வருடிச்செல்கிறது.
பரபரப்பு, விறுவிறுப்பு என்ற வார்த்தைகளுக்கு ஓய்வு கொடுக்கும் விதத்தில் திரைக்கதையை கையாண்டிருக்கும் இயக்குநர், நடிகர்களிடமும் அதற்கு ஏற்றவாறே வேலை வாங்கியிருக்கிறார். விஜய் சேதுபதியும், திரிஷாவும் எப்படி தங்களது கண்களாலும், எக்ஸ்பிரஸ்ன்களாலும் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்களோ அதுபோல அவர்களது நண்பர்களாக வரும் தேவதர்ஷினி, பகவதி பெருமாள் உள்ளிட்டவர்கள் நடிப்பில் மென்மையை கையாண்டிருக்கிறார்கள்.
காதல் படம் என்றாலே பாடல்கள் முக்கியம் வாய்ந்தவையாக இருக்கும், ஆனால் அதற்கான இடத்தை இயக்குநர் கொடுக்காததால், பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கும் இசையமைப்பாளர் கோவிந்த் வஸந்தா, நள்ளிரவின் அமைதியை தனது இசையால் நமக்கு புரிய வைத்திருக்கிறார். படத்தின் ஹீரோ போட்டோகிராபர் என்பதனாலேயோ என்னவோ, ஒளிப்பதிவாளர் சண்முக சுந்தரம், சாதாரண பிரேமை கூட ரசித்து ரசித்து படமாக்கியிருக்கிறார். ஒட்டு மொத்த படமே ஏதோ ஓவியத்தைப் பார்ப்பது போல அழகியலோடு படமாக்கப்பட்டிருக்கிறது.
அனைவரும் கடந்த வந்த பள்ளிக் காலம், அதில் அவரும் முதல் காதல் அனுபவத்தை, ஏற்கனவே தமிழ் சினிமாவில் பலர் சொல்லியிருந்தாலும், இயக்குநர் பிரேம்குமார் அதையே கவிதையாக சொல்லியிருக்கிறார்.
காதலுக்கு பல விதத்தில், பலர் எதிரியாக இருந்தாலும், ஒருவர் மீது ஒருவர் வைத்த காதலே, சூழ்நிலையால் காதலுக்கு எதிரியாவதை அழகியோடு படமாக்கியிருக்கும் இயக்குநர், காதல் வலியை ஆண் எப்படி அழகாக அனுபவிக்கிறார்கள் என்பதையும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தின் மூலமாகவும், அவரது இயல்பான நடிப்பு மூலமாகவும் ரொம்ப மென்மையாக சொல்லியிருக்கிறார்.
மொத்தத்தில், தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, முழுக்க முழுக்க காதல் படமாக வெளியாகியிருக்கும் இந்த ‘96’ காதலை நாம் ரசித்து..ரசித்து…பார்க்கலாம்.
-ஜெ.சுகுமார்