Tamilசினிமாதிரை விமர்சனம்

A1- திரைப்பட விமர்சனம்

அறிமுக இயக்குநர் ஜான்சன் இயக்கத்தில், சந்தானம் நடிப்பில், ராஜ் நாராயணன் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் ‘A1′ படம் எப்படி என்பதை பார்ப்போம்.

பிராமண சமூகத்தை சேர்ந்த ஹீரோயின் தாரா அலிஷா பெர்ரி, அடிதடி, அடாவடி என்று ரவுடித்தனம் செய்யக்கூடிய பிராமண பையனை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற லட்சியத்தில் இருக்கிறார். அந்த சமயத்தில் அடிதடியில் அமர்க்களப்படுத்தும் லோக்கல் பையனான சந்தானத்தை பிராமண சமூகத்தை சேர்ந்தவர் என்று தவறாக புரிந்துக் கொண்டு அவரிடம் காதல் சொல்ல, சந்தானமும் அந்த காதலை ஏற்றுக்கொள்கிறார். பிறகு சந்தானம் அவாள் இல்லை, என்பதை அறிந்துக்கொள்ளும் ஹீரோயின் காதலை கட் செய்ய, பிறகு சந்தானத்தின் நல்ல மனதை பார்த்து வெட்டிய காதலை மீண்டும் ஒட்டிக் கொள்கிறார்.

இதற்கிடையே, சந்தானத்தின் குடும்பம் ஹீரோயின் வீட்டுக்கு சென்று பெண் கேட்க, ஐயர் மாமா அடாவடியாக பேசி சந்தானம் அண்ட் பேமிலிக்கு கெட் அவுட் சொல்லிவிடுகிறார் ஹீரோயின் தாராவோ எந்த ஒரு தவறும் செய்யாத சுத்தமான அக்மார்க் மனிதரான தனது அப்பா தனக்கு கடவுள் போல, அவர் சொல் மிக்க மந்திரம் இல்லை, என்று கூறி காதலுக்கு நோ சொல்வதோடு, தனது அப்பாவிடம் எதாவது சிறு தவறு இருப்பதை நிரூபித்தாலும், அவரை உதரிவிட்டு உன்னோடு வந்துவிடுகிறேன், என்று சந்தானத்திடம் சவால் விடுகிறார்.

காதலி கைவிட்டதால் சோகத்தில் சரக்கடிக்கும் சந்தானம், தனது காதலுக்கு எதிராக இருக்கும் ஹீரோயின் அப்பாவை கொலை செய்ய வேண்டும், என்று போதையில் தனது நண்பர்களிடம் சொல்ல, அவர்களும் அதே போதையில் அவரை போட்டுத்தள்ள பிறகு என்ன நடந்தது, பிரிந்த சந்தானத்தின் காதல் மீண்டும் இணைந்ததா இல்லையா, என்பதை வயிறு வலிக்கும் அளவுக்கு சிரிக்க வைக்கும் காமெடியோரு சொல்லியிருப்பது தான் இந்த ‘A1′ படத்தின் மீதிக்கதை.

ஹீரோயினை துரத்தி துரத்தி காதலிக்காமல், அவராகவே ஹீரோவை கண்டதும் காதலிப்பது போல கதையை துவக்கி, பிறகு அந்த காதலில் விரிசல் அதன் மூலம் நடக்கும் கொலை,  என மசாலத்தனமான கதைக்கு சஸ்பென்ஸ் அண்ட் ட்விஸ்ட் நிறைந்த திரைக்கதையை அமைத்திருக்கும் இயக்குநர் ஜான்சன், படம் ஆரம்பித்த ஐந்தாவது நிமிடத்தில் ரசிகர்களை தனது காமெடி புதக்குழியில் விழ வைத்துவிடுகிறார்.

ஹீரோக்களுக்கு நண்பராக நடித்தாலும் சரி, தானே ஹீரோவாக நடித்தாலும் சரி, காமெடியை எங்கு, எந்த இடத்தில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதில் ஜகஜால கில்லாடியாக திகழும் சந்தானத்தின் ஒவ்வொரு டைமிங் காமெடியும் நம்மை வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறது. காமெடி தானே என்று அசால்டாக வந்து போகாமல், யூத் பசங்க பொறாமைப்படும் விதத்தில், உடம்பை படு ஸ்லிம்மாக வைத்துக்கொண்டு நடனம், நடிப்பு என்று அனைத்திலும் சந்தானம் அசத்துகிறார்.

பழைய ஜோக் தங்கதுரை, மாறன், கிங்ஸ்லி, எம்.ஸ்.பாஸ்கர், மனோகர் ஆகியோரும் சந்தானத்திற்கு நிகராக காமெடியில் கரைபுரண்டு ஓடுகிறார்கள்.

அதிலும், ஹீரோயினை பெண் கேட்க போகும் போது, அவர் பாடும் கீர்த்தனைக்கு ஏற்றது போல சந்தானம் பாடும் கானா பாட்டும், அதற்கு எம்.எஸ்.பாஸ்கரும், மனோகரும் கொடுக்கும் எக்ஸ்பிரஸன்களும் ஒட்டு மொத்த திரையரங்கையே சிரிப்பு சத்தத்தால் அதிர வைக்கிறது. காட்சிக்கு காட்சி யாராவது ஒருவர் டைமிங்கோடு ஜோக் அடித்து கலாய்க்க, அடுத்து வரும் வசனம் சரியாக கேட்க முடியாத அளவுக்கு, திரையரங்கில் ஒரே சிரிப்போ…சிரிப்பாக இருக்கிறது.

ஹீரோயின்  தாரா அலிஷா பெரிக்கு ரெகுலரான கமர்ஷியல் கதாநாயகி வேடம் தான். ஐயங்கார் வீட்டு பெண்ணுக்கு பொருத்தமான தோற்றத்துடன் இருப்பவர்,அவ்வபோது அரேபியன் குதிரையையும் நமக்கு  ஞாபகப்படுத்துகிறார்.

கர்நாடக ராகத்தையும், கானா பாட்டையும் ஒன்றாக கலந்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கொடுத்திருக்கும் பாடல்கள், ரசிக்க வைப்பது மட்டும் இன்றி, சில இடங்களில் நம்மை சிரிக்கவும் வைக்கிறது. கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவில் நடிகர்கள் அனைவரும் அம்சமாக இருக்கிறார்கள். குறிப்பாக சந்தானம் மற்றும் ஹீரோயினுக்கு தனி கவனம் செலுத்தியிருப்பது அனைத்துக் காட்சிகளிலும் தெரிகிறது. வட சென்னையை மையமாக வைத்த படம் என்றாலும், லொக்கேஷன்களில் அதை அப்பட்டமாக காட்டாமல் மேலோட்டமாக காட்டியிருக்கிறார்.

இனி வாழ்க்கையில் சிரிக்கவே கூடாது, என்று முடிவு செய்தவர்களை கூட சிரிக்க வைத்துவிடும் அளவுக்கு காமெடி காட்சிகள் அனைத்துமே இயல்பாக அமைந்திருக்கிறது. சந்தானமும் அவர்களது நண்பர்களும் சாதாரணமாக பேசும் போது கூட, யாராவது ஒருவர் டைமிங்கோடு அடிக்கும் ஜோக்குகள் நம்மை குபீரென்று சிரிக்க வைத்துவிடுகிறது.

சமீபகாலமாக காமெடி படம் என்ற பெயரில் நம் கழுத்தில் ரம்பம் போட்ட படங்களை பார்த்து காயம் அடைந்தவர்களுக்கு இப்படம் மூலம் இயக்குநர் ஜான்சன் மருந்து போட்டிருப்பதோடு, குடும்பமாக பார்க்ககூடிய பொழுதுபோக்கு படமாகவும் கொடுத்திருக்கிறார்.

பிராமண சமூகத்தை கலாய்க்கிறார்கள், என்று விமர்சிப்பவர்கள் கூட படத்தை பார்த்தால் சிரித்துக்கொண்டே வெளியே வருவதோடு, இந்த படத்தை பார்க்க சொல்லி ஓட்டு மொத்த பிராமணர்களுக்கும் சிபாரிசு செய்வார்கள். அந்த அளவுக்கு நம்மையும் மறந்து, சிரிக்க வைக்கும் காமெடி காட்சிகள் படத்தில் ஏராளம்.

இந்த படத்தை குடும்பத்தோடு பார்த்தால், குறிப்பாக கணவன் – மனைவி சேர்ந்து பார்த்தால், குறைந்தது ஒரு வாரத்திற்காவது குடும்பமே ஹாப்பி மோடில் இருக்கும்.

மொத்தத்தில், இந்த ‘A1′ அல்டிமேட்டான அன்லிமிடேட் காமெடி மீல்ஸ்!

-ஜெ.சுகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *