சேலத்தில் சரக்கு வாகனம் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து! – 8 பேர் உயிரிழப்பு
ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி 30 பயணிகளுடன் இன்று 12 மணிக்கு வந்த அரசுப் பேருந்து உத்தமசோழபுரம் பகுதியில் பிரேக் பிடிக்காததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்த சரக்கு வாகனத்தின் மீதும் தொடர்ந்து இருசக்கர வாகனத்தின் மீதும் மோதியது.
இதில் சரக்கு வாகனத்தில் வந்த குழந்தை மற்றும் இருசக்கர வாகனத்தில் பயணித்தவர்கள் என நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பேருந்தில் பயணம் செய்த 30 பயணிகள் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். காயமடைந்த பயணிகள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், டிப்பர் வேனில் வந்த மேலும் 4 பேர் படுகாயங்களோடு சேலம் அரியானூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் உயிர்ப்பலி 8-ஆக அதிகரித்துள்ளது.
விபத்து குறித்து தகவலறிந்த கொண்டலாம்பட்டி போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து கொண்டலாம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக விபத்துக்கு காரணமான அரசுப் பேருந்தை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அடித்து நொறுக்கியுள்ளனர். அரசுப் பேருந்து விபத்துக்குள்ளான சம்பவத்தால் சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும், போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள்,மணிகண்டன், இருசாயி, செல்வ ராஜ், அமுதா, குழந்தை நித்திஷ் கா ( 5), ஜீவிகா (11 மாதம்), முருகன், சத்யா ஆகியோர் என்பது தெரிய வந்துள்ளது.
