குழந்தைகளை அடிமையாக்குவதாகக் குற்றச்சாட்டு: 162 கோடி அபராதம் செலுத்த மெட்டா ஒப்புதல்!
அமெரிக்காவில் உள்ள 47 மாகாண அரசுகள் இணைந்து மெட்டா நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன. அதில், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் குழந்தைகளை அடிமையாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் சிறுவர் – சிறுமியரின் மனநலம் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தன.
குறிப்பாக, 13 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் எளிதில் இச்செயலிகளுக்குள் நுழையும் வகையில் விதிகளுக்குப் புறம்பாக மெட்டா செயல்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தன. கலிபோர்னியா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில், மெட்டா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் நேரில் ஆஜராக வேண்டிய சூழல் ஏற்பட்டது.
வழக்கு விசாரணை உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், நீதிமன்ற விசாரணை முடிவுக்கு வரும் முன்பே, நீதிமன்றம் விதித்த 162 கோடி ரூபாய் அபராதத் தொகையைச் செலுத்த மெட்டா தரப்பு சம்மதம் தெரிவித்துள்ளது.
