அதிமுக பலவீனமாகத்தான் இருக்கிறது – சசிகலா பேட்டி
வி.கே.சசிகலா தனது 71-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் தி.மு.க. அரசு தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் 10 மண்டலங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்வதற்கு தனியாருக்கு டெண்டர் விடப்பட்டது தவறு தான். யார் செய்தாலும் தவறு தான். தூய்மை பணியாளர் விவகாரத்தில், கடந்த 2016 தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் உரிய வழிவகை காண ஜெயலலிதா திட்டமிட்டு இருந்தார். அது குறித்து எனக்கு முழுமையாக தெரியும். ஆனால் அதன் பிறகு அவர் மறைந்து விட்டதால் பல மாற்றங்கள் ஏற்பட்டன.
அ.தி.மு.க. இப்போ வரைக்கும் பலவீனமாகத்தான் இருக்கு. அதை மாற்றுவது தான் என்னோட வேலை என்று நான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். நிச்சயமாக அதை செய்து தான் ஆக வேண்டும். இந்த மக்களுக்கு இதை செய்யவில்லை என்றால் மிகவும் சிரமமாகி விடும். இதை புதிதாக ஒருவர் கற்றுக்கொண்டு செய்ய முடியாது. இங்கே செய்து வைத்திருக்கும் சிக்கலை அனுபவப்பட்டவர்களால் மட்டுமே பிரிக்க முடியும். அதுதான் உண்மை.
எல்லோரும் கேள்வி கேட்க பத்திரிகையாளர்கள் சும்மா மைக் எடுத்துக்கொண்டு வந்துவிட்டார்கள் என்று சொல்வார்கள். பத்திரிகையாளராக இருப்பதற்கும் தகுதி, அனுபவம் வேண்டும். நீங்களும் 10 விஷயங்களை தெரிந்துகொண்டு, நிற்கின்ற நேரத்தில் சூழ்நிலைகளை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் அப்போது தானே அது பர்பெக்டாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
