Tamilசெய்திகள்

புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகத்திற்கான மாற்று இடம்! – அரசு தீவிர ஆலோசனை

சென்னையில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகத்தை அமைப்பதற்காகப் பட்டினப்பாக்கம் ஃபோர்ஷோர் எஸ்டேட் (Foreshore Estate) பகுதியில் திட்டமிடப்பட்டிருந்த திட்டம் மீனவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் தொடர் எதிர்ப்புகளால் கைவிடப்படும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது அண்ணா சாலை பல்லவன் இல்லத்தில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் (MTC) 13.22 ஏக்கர் வளாகத்தை மாற்று இடமாகத் தமிழக அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த ஃபோர்ஷோர் எஸ்டேட் திட்டத்திற்கு அப்பகுதி மீனவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதோடு, அரசியல் கட்சிகளும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தன. இதன் காரணமாக, புதிதாக நிலம் கையகப்படுத்த வேண்டிய அவசியமின்மை, அரசியல் ரீதியான சுமுகமான சூழல் மற்றும் பேருந்து, மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயில் வசதிகள் எளிதாகக் கிடைக்கப்பெறும் என்பதால் பல்லவன் சாலை வளாகத்தை அரசு தேர்வு செய்யக் திட்டமிட்டுள்ளது.

இங்குள்ள எம்.டி.சி மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக (SETC) தலைமையகங்கள் மற்றும் பணிமனைகளை கோயம்பேடு பேருந்து நிலையப் பகுதிக்கு மாற்றவும் ஆலோசிக்கப்பட்டு வருவதோடு, இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.