Tamilசெய்திகள்

புதிய தாக்குதலால் அமெரிக்கா வருத்தப்படும்! – ஈரான் எச்சரிக்கை

ஈரானில் உள்ள சிரிக் நகரில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில், அமெரிக்கா ஏவுகணைகளை வீசி இரவு முழுவதும் தாக்கியதில், ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் சுமார் 50 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தக கப்பல்கள் மீது இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையினர் (IRGC) சமீபத்தில் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது….

கடந்த வாரம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைய வருமாறு, ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து மொஜ்தபா கமேனி வேண்டுகோள் விடுத்த சில மணி நேரங்களுக்கு பிறகு, ஈரானில் உள்ள லராக் தீவில் அமெரிக்கா ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் பல ராணுவ வீரர்களும், பொதுமக்களும் கொல்லப்பட்டதாக இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை தெரிவித்தது.

இதையடுத்து ஜோர்டானில் அமைந்துள்ள இரண்டு அமெரிக்க விமானப்படை தளங்களான கிங் ஹுசைன் மற்றும் அல்-அஸ்ரக் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாக, ஈரான் நாட்டின் தெற்கில் அமைந்துள்ள ஹார்முஸ் ஜலசந்தியிலும், வளைகுடாவில் உள்ள ஒரு தீவிலும் அமெரிக்கா நேற்று தாக்குதல் நடத்தியது.

இந்த நிலையில் ஈரானின் (ஐ.ஆர்.ஜி.சி) செய்தித் தொடர்பாளர் ஹொசைன் மொஹேபி வெளியிட்ட X பதிவில், வாஷிங்டன் தனது புதிய தாக்குதல்களுக்காக வருந்தும் என்றும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு கடுமையான தண்டனை காத்திருக்கிறது என்றும் எச்சரித்துள்ளார்.