செப்டம்பர் 11 ஆம் தேதி வங்கிகள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு
வாரம் 5 நாட்கள் வேலைத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் மற்றும் செயல்திறன் சார்ந்த ஊக்கத்தொகை (PLI) திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 9 முக்கிய வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பான வங்கிச் சங்கங்களின் ஐக்கிய பேரவை (UFBU) சார்பில் வரும் செப்டம்பர் 11-ஆம் தேதி நாடு தழுவிய ஒரு நாள் வங்கி வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வங்கிகள் சங்கம் (IBA) மற்றும் மத்திய அரசுடன் தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து இந்த வேலைநிறுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில், கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் செப்டம்பர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் 3 நாள் தொடர் வேலைநிறுத்தமும், அக்டோபர் 26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டமும் நடத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
