கூட்டு பிரசாரத்திற்காக அதிமுகவுடன் பா.ஜ.க பொறுப்பாளர்கள் இன்று பேச்சுவார்த்தை
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே இருக்கிறது. தேர்தலை சந்திக்க பா.ஜ.க. தீவிரம் காட்டி வருகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. இந்த முறை அதிக இடங்களை கேட்டு பெறுவதில் ஆர்வமாக இருக்கிறது. இதற்காக, அ.தி.மு.க.வுடன் கலந்து பேசவும், கூட்டு பிரசாரத்தை முன்னெடுக்கவும், பா.ஜ.க. தேர்தல் வியூகத்தை வடிவமைக்கவும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து பா.ஜ.க. உத்தரவிட்டது.
அந்தவகையில், பா.ஜ.க. சார்பில் தேர்தல் பொறுப்பாளராக தேசிய துணை தலைவர் பைஜெயந்த் பாண்டா எம்.பி., இணை பொறுப்பாளர் மத்திய இணை மந்திரி முரளிதர் மொஹோல் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அவர்கள் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து முதல் முறையாக சென்னைக்கு நேற்று வந்தனர். தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை மாநில நிர்வாகிகளுடன் அவர்கள் முதல்கட்ட ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனையில் பா.ஜ.க. மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய மந்திரி எல்.முருகன், பா.ஜ.க. மாநில பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை, டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் எச்.ராஜா, வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., நடிகர் சரத்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அ.தி.மு.க. கூட்டணியில் அதிக தொகுதிகளை கேட்டு பெறுவது, கூட்டு பிரசாரம் செய்வது, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை, எவை? என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகி சென்ற முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோரை மீண்டும் இணைப்பது குறித்தும் கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் இன்று பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர்கள் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
