Tamilசெய்திகள்

இந்திய பிரதமர்களுடன் பணியாற்றிய அனுபவங்களை புத்தகமாக எழுதும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, தனக்கு பல பிரதமர்களுடன் நெருங்கி பணியாற்றிய அனுபவம் உள்ளது. அவர்களுடன் பணியாற்றிய அனுபவத்தை புத்தகமாக எழுதி வெளியிட இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் தொடர்ந்து 3 முறை ஆட்சியை பிடித்து முதல்வராக இருக்கும் மம்தா பானர்ஜி இது தொடர்பாக கூறியதவாது:-

நான் பல பிரதமர்களை அருகில் இருந்து பார்த்துள்ளேன். தற்போது, யார் யார் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் என்பது குறித்து புத்தகம் எழுதப்போகிறேன். அடுத்த வருடம் நடைபெறும் புத்தக திருவிழாவில் இந்த புத்தகம் வெளியிடப்படும். நான் மத்திய அமைச்சராக எட்டு முறை இருந்துள்ளேன். ரெயில்வேத்துறை, நிலக்கரி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறைகளை கையாண்டுள்ளேன். நான் என்ன பார்த்தேன். எப்படி பார்த்தேன் என்பதை எழுதுவேன்.

இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜிக்கு சுமார் 40 ஆண்டு அரசியல் அனுபவம் உள்ளது. காங்கிரஸ் மற்றும் என்டிஏ கூட்டணியில் இணைந்து பல்வேறு மத்திய அமைச்சர் பொறுப்புகளை ஏற்றுள்ளார். 1998 முதல் 2006 வரை என்டிஏ அரசில் இடம் பிடித்துள்ளார். 2009 முதல் 2012 ஆம் ஆண்டு வரை மன்மோகன் சிங் தலைமையிலான 2ஆம் முறை ஆட்சியில் இடம் பிடித்துள்ளார். 1998ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரிந்த நிலையில், வாஜ்பாய் தலைமையிலான அரசில் அமைச்சராக இருந்தார்.