பெங்களூருவில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் மற்றும் திமுக இடையிலான உறவை மிகக்கடுமையாகச் சாடியுள்ளார்.
கடந்த 25 முதல் 30 ஆண்டுகளாகத் திமுகவுடன் நெருக்கமான கூட்டணியில் இருந்த காங்கிரஸ், பலமுறை அந்தத் தொடர்பால் அரசியல் சிக்கல்களில் இருந்து தப்பித்ததையும், குறிப்பாக 2014-க்கு முந்தைய பத்தாண்டுகளில் திமுகவின் ஆதரவால்தான் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி தப்பிப் பிழைத்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆனால், அரசியல் சூழல் மாறியவுடன் காங்கிரஸின் அதிகாரப் பசி வெளிப்பட்டுவிட்டதாகக் குறிப்பிட்ட மோடி, தனக்குக் கிடைத்த முதல் வாய்ப்பிலேயே தனக்காக உழைத்த திமுகவின் முதுகில் காங்கிரஸ் குத்திவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.
தற்போது தனது அரசியல் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள காங்கிரஸ் மற்றொரு கட்சியின் முதுகில் ஏறிச் சவாரி செய்ய வேண்டிய பரிதாப நிலையில் இருப்பதாகவும், இதுவே அந்தக் கட்சியின் சந்தர்ப்பவாத அரசியலுக்குச் சான்று என்றும் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.