தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் சி. ஜோசப் விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதே வேளையில் சில அரசியல் ரீதியான ஆலோசனைகளையும் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார்.
தனது வாழ்த்துச் செய்தியில், பதவியேற்றதும் விஜய் கையெழுத்திட்டுள்ள மக்கள்நல அறிவிப்புகளை வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், “ஆரம்பத்திலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச வேண்டாம்; மக்களுக்குக் கொடுக்க மனசும் ஆட்சித் திறமையும்தான் வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் கோவிட் பெருந்தொற்று, இயற்கைச் சீற்றங்கள் மற்றும் மத்திய அரசின் நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தங்களது அரசு எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தியதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், தமிழகத்தின் கடன் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குள்ளேயே இருப்பதாகவும், இது குறித்த விவரங்கள் பிப்ரவரி பட்ஜெட்டிலேயே தெளிவுபடுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
“கஜானாவைத் துடைத்துவிட்டுச் சென்றுவிட்டனர்” என்ற விஜய்யின் குற்றச்சாட்டிற்குப் பதிலடி கொடுத்துள்ள ஸ்டாலின், இதெல்லாம் தெரிந்தே வாக்குறுதிகளை அளித்த நீங்கள், இப்போது மக்களை ஏமாற்றித் திசைதிருப்ப வேண்டாம் என்றும், நடைமுறைக்குச் சாத்தியமானதைச் செய்வேன் என்று கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் அரசு நிர்வாகத்தின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என்றும் காரசாரமாகத் தெரிவித்துள்ளார்.