Tamilசெய்திகள்

திருச்சியில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் ஒப்பந்த தொழிலாளர்கள் திடீர் போராட்டம்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மொண்டிப்பட்டியில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் (TNPL) இரண்டாவது அலகில் பணிபுரியும் 500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள், தங்களின் பல்வேறு வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரெனப் பணியைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் வழங்கப்பட்டிருக்க வேண்டிய ஊதிய உயர்வு மூன்று மாதங்களைக் கடந்தும் இதுவரை வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள், மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இவற்றுடன், ஆலையில் பணிபுரியும் நிரந்தரப் பணியாளர்களுக்கு இணையாகத் தமக்கும் தரமான உணவு வழங்கப்பட வேண்டும் என்றும், வாராந்திர விடுமுறை நாட்களுக்கும் முறையான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காலை 6 மணிக்கே பணிக்குச் செல்ல வேண்டிய ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு ஆலைக்கு வெளியே தங்களது கோரிக்கைகளை முழக்கமிட்டு இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதோடு ஆலை நிர்வாகமும் தற்போதைய சூழலில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.