புயல் பாதிப்புகள் பற்றி பிரதமர் மோடி கண்டுக்கொள்ளவில்லை – சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு
ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களை சமீபத்தில் டிட்லி என்ற புயல் கடுமையாக தாக்கியது. இதனால் பல நூறு மக்கள் பாதிக்கப்பட்டனர். புயல் பாதிப்புகளில் இருந்து மக்கள் சிறிது சிறிதாக இயல்பு நிலைக்கு திரும்புகின்றனர்.
புயல் பாதிப்புகளுக்கான மத்திய அரசின் நிவாரணம் இதுவரை கிடைக்கவில்லை என ஆந்திர மாநில முதல்மந்திரி சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், மாநில அரசு முழுமையான முயற்சிகள் அனைத்தையும் எடுத்துள்ளதாகவும், ஆனால் டிட்லியால் பாதிக்கப்பட்டவர்களை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஹுதுட் புயல் தாக்கியபோது ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம் அளிப்பதாக பிரதமர் மோடி வாக்குறுதி அளித்ததாகவும், ஆனால், 650 கோடி ரூபாய் மட்டுமே கொடுத்ததாகவும் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், பாதிக்கப்பட்ட பகுதிகளை சரிசெய்ய கடுமையாக முயற்சித்து வருவதாகவும், ஆனால் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், புயலால் பாதிக்கப்பட்ட பகுதியை காண வரவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.