டாக்டர்.ராமதாஸ் நலமுடன் இருக்கிறார் – மருத்துவர்கள் அறிவிப்பு
சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் அந்த தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று (ஏப்ரல் 12) பிரச்சாரம் மேற்கொண்டார். கூட்டம் முடிந்து அவர் மேடையில் இருந்து இறங்கிய போது திடீரென மயக்கமடைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரது மகள் ஸ்ரீகாந்தி உள்ளிட்டோர் தனியார் மருத்துவமனைக்கு அவரை காரில் அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து ராமதாஸ் மற்றொரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
முதற்கட்ட சிகிச்சை மேற்கொண்ட மருத்துவமனை மேலாண்மை இயக்குனர் அர்த்தனாரி மற்றும் டாக்டர் ராஜேஷ் ஆகியோர் கூறுகையில், ” டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு வயது அதிகமாக உள்ளது. இந்நிலையில், அவர் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் உடல் சோர்வு ஏற்பட்டு மயக்க நிலைக்கு சென்றுள்ளார். தற்போது அவர் நலமாக இருக்கிறார். 24 மணி நேர மருத்துவ கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடரலாம்” என்று தெரிவித்தனர். குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், ராமதாஸ் சிகிச்சை பெற்று வந்த கோகுலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இருந்து சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தரன் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து இன்று அவர் சென்னைக்கு அழைத்துச் செல்லப்படுவதாக கூறப்படுகிறது.
