தமிழகத்தை நெருங்கும் கஜா புயல் – இன்று இரவு பலத்த மழைக்கு வாய்ப்பு
வங்க கடலில் கடந்த வாரம் புதன்கிழமை அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்தம் உருவானது. அது கடந்த 11-ந்தேதி புயல் சின்னமாக மாறியது.
அந்த புயலுக்கு இலங்கை அறிவித்த “கஜா” என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. முதலில் அந்த புயல் ஒடிசா மாநிலத்தை குறி வைத்தது. பிறகு தெற்கு திசை நோக்கி நகர்ந்து சென்னையை தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த புயல் 3-வது முறையாக திசை மாறியது. தென்மேற்கு வங்க கடல் பகுதியை நோக்கி நகர்ந்ததால் சென்னைக்கும் நாகைக்கும் இடையே கரையை கடக்கும் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது.
பின்னர் கஜா புயலின் திசையில் மேலும் மாற்றம் ஏற்பட்டது. மேற்கு-தென் மேற்கு நோக்கி நகர்ந்ததால் பாம்பனுக்கும், கடலூருக்கும் இடையே அந்த புயல் நாளை (வியாழக்கிழமை) காலை கரையை கடக்கும் என்று வானிலை நிபுணர்கள் கூறி இருந்தனர்.
முதலில் மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் சுழன்று வந்த கஜா புயல் நேற்று முன்தினம் இரவு முதல் வேகத்தை குறைத்தது. நேற்று முழுவதும் அந்த புயல் வேகம் எடுக்கவில்லை. நேற்று அதிகாலை மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில்தான் புயல் நகர்ந்தது.
நேற்று மதியம் புயலின் வேகம் மணிக்கு 6 கி.மீ. என்ற அளவில்தான் இருந்தது. நேற்று இரவும் புயல் வேகம் எடுக்கவில்லை. இன்று காலையிலும் புயல் நகர்வு மிகவும் மெதுவாக இருந்தது.
கஜா புயல் இப்படி வேகம் குறைந்ததற்கு வங்க கடலில் நேற்று முன்தினம் உருவான 2 வளிமண்டல மேலடுக்கு சுழற்சிதான் காரணம் என்று தெரிய வந்துள்ளது. இந்த 2 வளிமண்டல மேலடுக்கு காற்றுகளில் ஒன்று கஜா புயலுக்கு முன்பக்கமாகவும், மற்றொன்று கஜா புயலுக்கு பின்பக்கமாகவும் நிலவியது.
எதிர் எதிர் திசையில் நகரக்கூடிய வளிமண்டல காற்றுகளுக்கு மத்தியில் கஜா புயல் சிக்கிக்கொண்டது. இதன் காரணமாகவே கஜா புயலால் அதிக வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வர இயலவில்லை.
இதற்கிடையே இந்திய பெருங்கடலில் தென் பகுதியில் உருவான மற்றொரு புயலும் கஜா புயலின் வேகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இவை அனைத்தும் சேர்ந்து கஜா புயலை கடந்த 24 மணி நேரத்தில் அதிக நகர்வு இல்லாமல் மணிக்கு 3 முதல் 4 கிலோ மீட்டர் வேகத்திலேயே நகர செய்தது.
நேற்று காலை வடமேற்கு மற்றும் மேற்கு-தென்மேற்கு திசை நோக்கி கஜா புயல் சற்று தன் பாதையை மாற்றியது. இதனால் கஜா புயல் சென்னைக்கு அருகில் நெருங்கி வந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் இருந்து 540 கிலோ மீட்டர் தொலைவிலும் நாகையில் இருந்து 640 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டு இருந்தது.
கஜா புயல் அடுத்த 24 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று பகலில் கஜா புயல் நகர்வு வேகம் அதிகரித்துள்ளது. இரவுக்குள் கஜா புயல் வேகம் பல மடங்கு பெருகும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இன்று இரவு அல்லது நாளை காலை கஜா புயல் தமிழக கடலோரத்தில் நெருங்கும். எனவே இன்று இரவு முதல் கடலூர், காரைக்கால், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலும் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மழை பெய்யும்போது 80 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளது. சில இடங்களில் 20 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நேற்று வரை கஜா புயல் நாளை காலை கரையை கடக்கும் என்றுதான் கூறப்பட்டு வந்தது. புயல் நகர்வு வேகம் குறைந்ததால் நாளை மாலை கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று கஜா புயல் நகர்வு மீண்டும் தாமதம் ஆனால் நாளை இரவுதான் கரையை கடக்க வாய்ப்புள்ளது.
பாம்பனுக்கும், கடலூருக்கும் வேதாரண்யம் பகுதியில் புயல் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கஜா புயல் நகர்வு கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக் கொண்டிருப்பதால் அது எந்த பகுதியில் கரையை கடக்கும் என்பது கணிக்க முடியாதபடி உள்ளது.
நாளைதான் எந்த பகுதியில் கஜா புயல் தாக்கும் என்பது உறுதியாக தெரிய வரும்.
கஜா புயல் நெருங்குவதால் சென்னை முதல் தூத்துக்குடி வரை கடலோர மாவட்டங்களில் பெரும் பாலான பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக அணைக்கட்டு பகுதிகளில் அதிக தண்ணீர் சேரக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இன்று இரவு முதல் 17-ந்தேதி வரை 3 நாட்களுக்கு சென்னை உள்பட கடலோர பகுதிகளில் கணிசமான மழை பெய்யும் என்று வானிலை இலாகா கூறி உள்ளது. அதற்கேற்ப முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கும்படி மாநில அரசை வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.
கஜா புயல் தமிழக கடலோரப் பகுதியை தாக்கி தரைப் பகுதிக்குள் வந்ததும் அது வலு குறையத் தொடங்கி விடும். தரைக்கு வந்ததும் அதன் சீற்றம் 100 கிலோ மீட்டரில் இருந்து 60 கி.மீ. ஆக குறைந்து விடும்.
16-ந்தேதி தமிழக உள் மாவட்டங்கள் வழியாக குறைந்த வேகத்தில் செல்லும் புயல் கேரளாவுக்குள் நுழையும். 17-ந்தேதி அங்கிருந்து அரபிக் கடல் பகுதிக்குள் செல்லும். அப்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி என்ற நிலைக்கு வலு இழந்து விடும்.
18-ந்தேதி அந்த குறைந்த காற்றழுத்தம் கரைந்து விடும்.
கஜா புயலை எதிர் கொள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவின் 15 படைகள் கடலோர மாவட்டங்களில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. குடிநீர், மின்சாரம் சப்ளையை ஒழுங்குப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்கிறார்கள்.
நாளை இரவு புயால் தொலை தொடர்பு துண்டிக்கப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொலைத் தொடர்பு துறை அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளனர்.
ஆனால் கஜா புயல்தான் மெல்ல வந்து கொண்டு இருக்கிறது. அந்த புயல் எப்போது வந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.