Tamilசெய்திகள்

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் சாமானிய மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும் – பிரதமர் மோடி பேச்சு

தலைநகர் டெல்லியில் நடந்த தேசிய விருது பெற்ற ஆசிரியர்களிடம் பிரதமர் மோடி பேசியதாவது:

உரிய காலத்தில் மாற்றங்கள் செய்யாமல் தற்போதைய சூழ்நிலையில் நமது நாட்டை சரியான இடத்தில் நிலைநிறுத்த முடியாது. ஆகஸ்ட் 15-ல் செங்கோட்டையில் உரையாற்றும்போது இந்தியாவை தன்னிறைவு பெறுவதற்காக, அடுத்த தலைமுறையினருக்கான சீர்திருத்தம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என தெரிவித்தேன். இந்த தீபாவளி மற்றும் சாத் பண்டிகைக்கு மக்களுக்கு இரட்டிப்பு பரிசு கிடைக்கும் என உறுதியளித்து இருந்தேன்.

தற்போது ஜிஎஸ்டி இன்னும் எளிதாக மாறி உள்ளது. நவராத்திரியின் முதல் நாளான செப்டம்பர் 22 அன்று அடுத்த தலைமுறைக்கான இந்த சீர்திருத்தம் அமல்படுத்தப்படும். இந்த சீர்திருத்தம் சாமானிய மக்களுக்கு உதவும். அனைத்துப் பொருட்களின் விலையும் குறையும்.

மக்களுக்கு ஆதரவான கொள்கையே எங்களது நோக்கம். இந்த சீர்திருத்தங்கள் இந்தியாவை தன்னிறைவு பெறச் செய்யும். நாட்டின் தேவை குறித்து ஒவ்வொரு மாணவரும் அடுத்த தலைமுறையினரும் சிந்திக்க வேண்டும். 8 ஆண்டுக்கு முன்பு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட போது, பல ஆண்டு கனவு நனவானது. ஜிஎஸ்டிக்கான விவாதம் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு துவங்கவில்லை. அதற்கு முன்னரே விவாதம் நடந்தது. ஆனால், அதற்கான பணிகளில் யாரும் ஈடுபடவில்லை.

ஜிஎஸ்டி சீர்திருத்தம் காரணமாக சாமானிய மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதுடன், நுகர்வு அதிகரித்து நாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கம் கிடைக்கும். எளிதாக தொழில் செய்வதற்கான வாய்ப்புகளை அரசு உருவாக்கி வருகிறது. இதனால் முதலீடு மற்றும் வேலைவாய்ப்புக்கு ஊக்கம் கிடைக்கும். வளர்ந்த இந்தியாவை கட்டமைப்பதற்கான கூட்டாட்சி ஒத்துழைப்பை இது பலப்படுத்தும். ஏழைகள், நடுத்தர வகுப்பினர், பெண்கள், மாணவர்கள், விவசாயிகள், இளைஞர்கள் அனைவரும் பயன்பெறுவர் என தெரிவித்தார்.