Tamilசெய்திகள்

பிரதமர் மோடி மார்ச்-6 ஆம் தேதி சென்னை வருகிறார்

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஆளும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தேமுதிகவை கூட்டணியில் சேர்க்கும் முயற்சியும் நடைபெறுகிறது. இதற்கான பேச்சுவார்த்தையை அதிமுக தலைவர்கள் தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வரும் மார்ச் 1-ம் தேதி கன்னியாகுமரிக்கு வருகை தர உள்ளார். கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் 1-ம் தேதி மதியம் நடைபெறும் அரசு விழாவில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார். பின்னர் அருகே அமைக்கப்பட்டுள்ள மற்றொரு மேடையில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இவ்விழாவில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர். பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பிரதமரின் பிரச்சார திட்டம் குறித்து அவர் கூறியதாவது:-

தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 1-ம் தேதி கன்னியாகுமரிக்கு வருகிறார். அதன்பின் சென்னைக்கு மார்ச் 6-ம் தேதி அவர் வருகிறார். பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தொண்டர்கள் முன் பேசுகிறார்.

கூட்டணியில் சேருவதற்கு தே.மு.தி.க.விற்கு உரிய மரியாதை தரப்பட்டது. கூட்டணிக்கு வந்தால் உரிய மரியாதை அளிக்கப்படும் என்று எங்கள் கட்சி தலைவர்களும் கூறியிருக்கிறார்கள். எங்களைப் பொருத்தவரை நல்ல கூட்டணி அமைய வேண்டும். எண்ணிக்கை முக்கியமில்லை. இதற்காக சில இடங்களை விட்டுக்கொடுத்தாலும் பரவாயில்லை என்று நினைக்கிறோம்.

விவசாயிகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.2 ஆயிரம் நிதியுதவி அவர்களுக்கு பலன் தரும். தேவையான வேளாண் பொருட்களை அவர்கள் வாங்குவதற்கு ஏற்ற வகையில் ஊக்க தொகையாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மோடி சென்னை வரும்போது, காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபடுவார் என்றும், சங்கர மடத்திற்கு சென்று சங்கராச்சாரியாரை சந்தித்து ஆசி பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மோடி பங்கேற்கும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தை காஞ்சிபுரத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

பிரதமர் மோடி சென்னை வருவதற்கு முன்னதாகவே கூட்டணி இறுதி செய்யப்படும் என்றும், பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் கூட்டணிக் கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கேற்று பேசுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினமே கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது இறுதி செய்யப்படலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *