ஐதராபாத்தின் முக்கிய சாலைகளுக்கு டிரம்ப், ரத்தன் டாடா பெயர்கள் சூட்ட முடிவு
ஐதராபாத்தில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் அமைந்துள்ள சாலை ஒன்றுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெயரை சூட்ட தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது. அதாவது அந்த சாலைக்கு டொனால்ட் டிரம்ப் அவென்யூ’ என்று பெயரிடப்படும் என்று தெலுங்கானா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் அமைக்கப்பட உள்ள RRR எனப்படும் பசுமை வழிச் சாலைக்கு மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா பெயரை சூட்ட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக தகவல் தெரிவிக்க மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கும், அமெரிக்க தூதரகத்திற்கும் தெலுங்கானா அரசு கடிதம் எழுதவுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், டெல்லியில் நடைபெற்ற USISPF மாநாட்டில் பேசிய தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, “ஐதராபாத்தில் உள்ள முக்கிய சாலைகளுக்கு முன்னணி உலகளாவிய நிறுவனங்கள் மற்றும் தலைவர்கள் பெயரைச் சூட்ட வேண்டும் தெரிவித்தார்.
குறிப்பாக கூகிள் மற்றும் கூகிள் மேப்ஸின் உலகளாவிய தாக்கத்தையும் பங்களிப்பையும் அங்கீகரிக்கும் வகையில் ஒரு முக்கிய பகுதிக்கு ‘கூகிள் ஸ்ட்ரீட்’ என்று பெயரிடப்படும் என்றும் மைக்ரோசாப்ட் மற்றும் விப்ரோ பெயரும் சாலைகளுக்கு வைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
