Tamilசெய்திகள்

டெல்லியில் இந்தியா கூட்டணி இன்று ஆலோசனை

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் இன்று ((ஜூன் 8)) நடத்துகிறது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி, தவெகவுடன் கூட்டு சேர்ந்து அமைச்சரவையில் பங்கேற்றுள்ளது. அதே போல திமுக கூட்டணியில் இருந்த இடதுசாரி கட்சிகள், ஐயூஎம்எல், விசிக போன்ற கட்சிகளும் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தன. இதனால் விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக காங்கிரஸ் – திமுக இடையே கூட்டணி முறிந்துள்ளது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணி ஒன்று இல்லை என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிதவித்துள்ளார். இந்த நிலையில், தவெகவுடன் கூட்டணி வைத்தது காங்கிரஸ் செய்த துரோகம் என்று திமுக விமர்சித்து வருகிறது. இந்த நிலையில், இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காது என்று திமுக அறிவித்துள்ளது. இந்தியா ஜன்பந்தன் என்ற இந்த கூட்டத்தில் 23 அரசியல் கட்சிகள் பங்கேற்பதை உறுதி செய்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ” கோடிக்கணக்கான இந்தியர்களின் வாக்குரிமையைப் பறிப்பது, அரசியலமைப்பை தினமும் தாக்குவது, புலனாய்வு அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைப்பது, கோடிக்கணக்கான இந்தியர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாகச் சேதப்படுத்துவது, இடைவிடாத விலை உயர்வால் குடும்ப பட்ஜெட்டுகளை உடைப்பது, லட்சக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கைகளையும் விருப்பங்களையும் காட்டிக்கொடுப்பது, முதலீட்டுச் சூழலை மந்தப்படுத்துவது, அதன் வெளியுறவுக் கொள்கையால் தேசிய நலனைப் பாதிப்பது போன்ற மோடி அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு தங்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தபோதிலும், சில கட்சிகள் தத்தமது சொந்த காரணங்களுக்காக இந்த குறிப்பிட்ட கூட்டத்தில் கலந்துகொள்ள இயலாமையை வெளிப்படுத்தியுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.